முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டுச் சிங்களக் குடியேற்றங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபை சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு வருவதாக வட.மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகாவலி அதிகாரசபை தனது செயற்றிட்டப் பகுதியை விரிவாக்குவதன் ஊடாக மாயபுர என்ற பெயரில் சிங்களக் குடியேற்றத்தினைப் பாரியளவில் திட்டமிட்டு வருவதாக இன்று (செவ்வாய்க்கிழமை) மாகாணசபையில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இன்று வட.மாகாணசபையின் 119வது அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி மாயபுர சிங்கள குடியேற்றம் தொடர்பாக விசேட கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றைச் சபைக்கு சமர்ப்பித்தார்.
இதன்போது ரவிகரன் உரையாற்றுகையில், ‘மகாவலி அதிகாரசபை தனது செயற்றிட்டப் பகுதியை விரிவாக்குவதன் ஊடாக மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது.
இதன் ஊடாக கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருணாட்டுக்கேணி மற்றும் நாயாறு பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதன் மூலம் சுமார் 7 ஆயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் வாழும் சிங்கள மக்களை வெலி ஓயா என அழைக்கப்படும் தனிச் சிங்கள பிரதேச செயலர் பிரிவுடன் இணைப்பதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றது.
இதனால் பெரும் பாதிப்பு உண்டாகப்போவதுடன், இந்த விடயம் ஒரு பாரதூரமான விடயமாகும். இந்த விடயம் தொடர்பாக அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.