பெரியார் சிலையுடைப்புக்கு மட்டக்களப்பில் எதிர்ப்பு!

தமிழகத்தில் பெரியார் சிலையுடைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்குக் காரணமானவரான இந்திய பாரதிய ஜனதா கட்சியின் செயலாளரான எச்.ராஜாவின் உருவப்படம், மட்டக்களப்பில் எரிக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில், செவ்வாய்க்கிழமை மாலை, வல்லினம் 100 சஞ்சிகையின் அறிமுக நிகழ்விலேயே எச்.ராஜாவின் படம் எரிக்கப்பட்டதுடன், கண்டியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மலேசியாவில் இருந்து வெளிவரும் வல்லினம் சஞ்சிகையின் 100ஆவது இதழ் தொடர்பான அறிமுகமும் உரையாடலும் கூடிய நிகழ்வு, மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில், மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில், செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில், தமிழகத்தில் பெரியார் சிலையுடைப்புகள் நடைபெறுகின்றமைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும், கண்டியில் நடைபெற்ற வன்முறைக்கும் தமது அமைப்பு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என்றும் மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் தலைவர் கணேசன் திலிப்குமார் தெரிவித்தார்.

அத்துடன், தமிழகத்தில் பெரியார் சிலையுடைப்புக்கு காரணமானவரான இந்திய பாரதிய ஜனதா கட்சியின் செயலாரான எச்.ராஜாவின் உருவப்படம் பாரம்பரியமான மங்கல விளக்கேற்றலுக்கு பதிலாக எரியூட்டி எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் தங்களது நிகழ்வினை ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், தமிழகத்தில் பெரியாருடைய சிலை உடைக்கப்பட்டாலும், இலங்கையின் மட்டக்களப்பில் முதலாவது பெரியார் சிலையை விரைவில் அமைக்கவுள்ளதாகவும் திலிப் குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் தலைவர் கணேசன் திலிப்குமாரின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வல்லினம் சஞ்சிகையின் தொகுப்பாசிரியர் ம.நவீன், வல்லினம் ஆசிரியர் குழுவின் விஜயலட்சுமி, தயாஜீ, இரா.சரவண தீர்த்தா, அ.பாண்டியன், ஸ்ரீ தர்ரங்கராஜ் உள்ளிட்ட மலேசிய இலக்கிய செயற்பாட்டாளர்கள் பலரும் பங்கு கொண்டனர்.

இவ் அறிமுக நிகழ்வில், வல்லினம் 100 இதழின் நேர்காணல்கள், விமர்சனங்கள் பகுதி தொடர்பில் எழுத்தாளர் கௌரிபாலன், சிறுகதை, கவிதைகள் தொடர்பில் எழுத்தாளர் த.மலர்ச்செல்வனும், பத்திகள், கட்டுரைகள் குறித்து திலிப்குமாரும் கருத்துரைகள் வழங்கினர்.

பேராசிரியர்களான எம்.ஏ.நுக்மான், சி.மௌனகுரு, சிரேஸ்ட எழுத்தாளர்களான எஸ்.எல்.எம். ஹனிபா, ஜிப்ரி, சிராஜ் மசூர்,  தேவகாந்தன், ஓ.கே.குணநாதன், திருக்கோவில் கவியுகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள் , ஆர்வலர்கள் கலந்து கொண்ட  அறிமுக உரையாடல் நிகழ்வு வல்லினம் குழுவினரின் கருத்தாக்கங்களுடன் சிறப்பாக நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.