புதிய பயங்கரவாத சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீவிரம்!

கண்டியில் முஸ்லிம் மக்கள் மீது அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையானது, ஜனநாயக மற்றும் பன்முக சமுதாயத்தில் இடமற்ற சிலரால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான செயல் என ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 37ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை குறித்து நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இத்தகைய சம்பவங்கள் உரிமைகளும், சட்டத்தின் ஆட்சியும் அனைவருக்கும் சமமானது என்ற இலங்கையின் பகிரப்பட்ட நோக்கத்திற்கு எதிரானவையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டத்தின் சரியான செயல்முறைக்கு அமைவாக இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க உறுதியாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் செயல்முறை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குவது குறித்து கருத்து தெரிவித்த அவர், மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் பிற சர்வதேச தரங்களை உறுதிபடுத்தும் வகையில் புதிய பயங்கரவாத சட்டத்தை கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் மொழிப்பெயர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் நாடாளுமன்றில் பரிசீலிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஐ.நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அனைத்து மட்டங்களிலும் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் உறுதிபடுத்தினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.