சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு இடையீட்டு மனு!

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, நிராகரிக்குமாறு கோரி இடையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   

அந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மனு​வொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவை நிராகரிக்குமாறு கோரியே, சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.   

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு, இடையீட்டுத் தரப்பினராக தான் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுத்தொடர்பில். எழுத்துமூலமான விளக்கத்தையும் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு உயர்நீதிமன்றத்தில் கையளித்துள்ளார்.   

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்துக்கு எதிராக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாப்பை மீறுவதாகும். அவ்வாறான மனுவொன்றை தாக்கல் செய்வதற்கு, சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவினால் அனுமதியளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.   

இவ்வாறான மனுவொன்றைத் தாக்கல் செய்வதற்கு, இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் நிறை​வேற்றுக்குழுவினால் அனுமதியளிக்கப்படவில்லையென அந்தச் சங்கத்தின் உப-தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், திறந்த நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.   

நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, அந்தச் சங்கத்தின் நோக்கங்களுக்கு எதிரானது என்பதுடன் பெரும் எண்ணிக்கையிலான சட்டத்தரணிகள், அவை தொடர்பில் அவதானத்துடன் உள்ளனர் என்றும் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு சமர்ப்பித்துள்ள எழுத்துமூலமான விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

சட்டத்தரணிகள் சங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக, சட்டத்தரணிகள் சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர். ஆகையால், மேற்குறிப்பிட்ட விடயங்களை ஆராய்ந்து, உண்மைகளை மூடிமறைத்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நிராகரிக்குமாறு சட்டத்தரணி நாகானந்த ​கொடித்துவக்கு தாக்கல் செய்துள்ள விளக்கத்தில் கோரப்பட்டுள்ளது.   
நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் கடந்த 2018 மார்ச் மாதம் 06ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.