நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு தபாலில் போதைப் பொருள்!

பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் ஊடாக நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பட்டிருந்த 22 கிராம் 170 மில்லிகிராம் நிறைக்கொண்ட கொக்கைன் போதைப் பொருள் அடங்கிய பொதியுடன் இருவரை கொழும்பு மத்திய தபால் பரிமாற்று மையத்தில் வைத்து சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 

குறித்த பொதியில் பெயர் குரிப்பிடப்ப்ட்டிருந்த வத்தளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ரனேபுர தேவகே லலித் சுரங்க மற்றும் அவருக்கு அந்த பொதியை பெற்றுக்கொடுக்க 50 ஆயிரம் ரூபா பெற்று உதவ முயன்ற கொழும்பு மத்திய தபால் பரிமாற்று மையத்தில் சேவையாற்றும் கேகாலை - பல்லேகமவைச் சேர்ந்த 28 வயதுடைய தென்னவத்தலாகே திலான் மதுவிந்தன ஆகியோரே இவ்வாறு சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் கொக்கைன் போதைப்பொருளுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ( பீ.என்.பி) நேற்று பிற்பகல் கையளிக்கப்பட்டதாகவும், அவர்களை மாளிகாகந்த  நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்து 7 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
 அதன்படி போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் அதிரடிப்படை கட்டளைத் தளபதியுமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப், பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்த ஆகியோரின் மேற்பார்வையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தனபாலவின் ஆலோசனைக்கு அமைய பிரதான பொலிஸ் பரிசோதகர் லூடவைட் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய முடிவதாவது,
குறித்த போதைப்பொருள் அடங்கிய  பொதி கடந்த ஜனவரி மாதம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த பொதியைப்பெற அறிவிக்கப்பட்டும் அதில் பெயர் குறிப்பிடப்பட்ட  நபர் மத்திய தபால் பரிமாற்று மையத்துக்கு வரவில்லை. இந் நிலையில் நேற்று முன்தினம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்று மையத்தில் சேவையாற்றும் கேகாலை - பல்லேகமவைச் சேர்ந்த 28 வயதுடைய தென்னவத்தலாகே திலான் மதுவிந்தன எனும் இளைஞன் அந்த பொதியை பெற முன்னிலையாகியுள்ளார். இதன்போது அந்த பொதியை பரிசோதனை செய்தபோது அதில் கொக்கைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
 இதனையடுத்து சுங்கப் பிரிவின் அதிகாரிகள் அந்த இளைஞரை தடுத்து வைத்து விசாரணை செய்துள்ளனர். இதன்போது 50 ஆயிரம் ரூபாவை தான், பொதியில் பெயரிடப்பட்டுள்ள நபரிடம் இருந்து பெற்றதாகவும், குறித்த பொதியை விடுவித்து தருவதற்கே அதனைப் பெற்றதாகவும் அதன்படியே பொதியைப் பெற தான் முன்வந்ததாகவும் அந்த இளைஞன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பெற்றுக்கொண்ட 50 ஆயிரம் ரூபாவில் 49 ஆயிரம் ரூபாவை சுங்க அதிகாரிகள் குறித்த இளைஞனிடம் இருந்து மீட்டனர்.
 இதனையடுத்து அந்த இளைஞர் ஊடாக பொதியில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த வத்தளையைச் சேர்ந்த லலித் எரங்க என்பவருக்கு தொலைபேசி அழைப்பை  ஏற்படுத்தி, பொதியை பெற்றுச் செல்ல வருமாறு கூறச் செய்து, அங்கு வந்தபோது அவரையும் கைதுசெய்தனர்.
 இதனையடுத்தே அவ்விருவரும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.