ஆனையிறவு வெற்றிக்கு பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கமே ஒரு புதிய போரியல் வரலாறு!


ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை தகர்த்தழிக்க தயாரான விடுதலைப்புலிகள் அதற்கான சகல முன்னேற்பாடுகளையும் பூர்த்தி செய்திருந்தனர். 1991ஆம் ஆண்டு ஆனையிறவு படைமுகாம் தகர்ப்பு முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவுபோல் இம்முறையும் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் தெளிவாகவிருந்த பால்ராஜ், அதற்காகவே மிகவும் அபாயகரமான குடாரப்பு தரையிறக்கத் திட்டத்தை தயாரித்திருந்தார்.


 தற்பாதுகாப்பு தாக்குதலுக்கேற்றவாறே ஆனையிறவு களமுனை அமைந்திருந்தது. ஆனால், அதை தாக்குதலுக்கேற்ற களமாக மாற்றிய பிரபாகரனின் திட்டத்திற்கு பால்ராஜ் செயல்வடிவம் கொடுக்க தயாரானார்.
ஆனையிறவு தளம் மீதான தாக்குதலுக்கு திட்டம் வகுக்கப்பட்டபோது குடாரப்பு தரையிறக்கத்துக்கான மிகவும் ஆபத்தான, வெற்றி பெறும் சாத்தியம் குறைவான திட்டத்தை பால்ராஜ் முன்வைத்து இதற்கு பிரபாகரனின் அனுமதியை கோரினார். குடாரப்பு தரையிறக்கம் தற்கொலைக்கு ஒப்பானது என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிரபாகரன் அதற்கு இணங்கவில்லை. ஆனாலும், தனது திட்டத்தில் பிடிவாதமாகவிருந்த பால்ராஜ் இத்திட்டத்தின் மூலம் ஆனையிறவை வெற்றிகொள்ள முடியுமெனக் கூறியதுடன் அதற்காக 1200 பேரைக் கொண்ட சிறப்பு படையணியொன்றும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறானதொரு தாக்குதலை இராணுவம் எதிர்பார்த்திருக்காதென்பதால் இத்தரையிறக்கம் வெற்றியளிக்குமெனவும் வாதிட்டார்.
பால்ராஜின் போரியல் ஆற்றல் பிரபாகரனுக்கு நன்கு தெரிந்திருந்த போதும் ஒவ்வொரு போராளிகளையும் தனது குழந்தைகளாக கருதும் அவர் ஒருவேளை இத்தரையிறக்கம் தோல்விகண்டுவிட்டால் அதனால் ஏற்படும் அழிவுகளைப் பற்றி பால்ராஜுக்கு தெளிவுபடுத்தினார்.

குடாரப்பில் 1200 பேரைக் கொண்ட சிறப்பு படையணி தரையிறக்கப்பட்டால் அவர்கள் திரும்பி வரவேண்டுமானால் ஆனையிறவை வெற்றி கொண்டு ஏ9 வீதியூடாகவே வரவேண்டும். ஆனையிறவை வெற்றிகொள்ள முடியாவிட்டால் மீண்டும் கடல்வழியாக திரும்பி வருவதற்கு வாய்ப்புகளில்லை.
ஏனெனில், ஆனையிறவு படைத்தளம் மூன்று புறம் கடல்நீரேரியால் சூழப்பட்டுள்ளது. புலிகளின் தரையிறக்கத்தை எதிர்பார்க்காத இலங்கை கடற்படை புலிகளின் சிறப்பு படையணி தரையிறங்கியவுடன் கடல்வழியூடான புலிகளின் தொடர்புகளை துண்டிக்கமுற்படும்.


அவ்வாறான நிலையில் புலிகளின் தரையிறக்கத் திட்டமோ அல்லது ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலோ தோல்வியடைந்தால் தரையிறங்கிய அணி திரும்பிவருவதற்கு ஏ9 வீதியை தவிர வேறுவழியில்லை. அதனால் தான் “1200 பேருடன் நீங்கள் குடாரப்பில் தரையிறங்கினால் ஆனையிறவு தளத்தை நாம் வெற்றிகொண்டால் மட்டுமே நீங்கள் திரும்பி வரமுடியும். இல்லாவிட்டால் உங்கள் அனைவரையும் நாம் இழக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என பால்ராஜுக்கு கூறிய பிரபாகரன் பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கத்துக்கு அனுமதிவழங்கினார். பிரபாகரனின் எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுத்தே பழக்கப்பட்டுப்போன பால்ராஜ் பிரபாகரனின் இந்தக்கவலையையும் தனது மதிநுட்பத்தால் போக்கினார்.


ஆம் ஆண்டு அதிகாலையில் 1200 விடுதலைப்புலிகளைக் கொண்ட சிறப்புப் படையணி பால்ராஜ் தலைமையில் வடமராட்சி கிழக்கின் குடாரப்பு, மாமுனைப் பகுதியில் அதிரடியாகத் தரையிறங்கியது. கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசையின் வழிகாட்டலில் கடற்புலிகளின் அதிவேகப் படகுகளான `குருவி’கள் மூலம் இந்த சிறப்பு படையணி வெற்றிகரமாகத் தரையிறங்கி நிலையெடுத்துக் கொண்டது. இராணுவத்தின் 54ஆவது, 53ஆவது படையணிகளின் இரு பிரிகேட்டுகள் உட்பட 15ஆயிரம் வரையிலான இராணுவத்தினர் ஆனையிறவில் குவிந்திருக்க, அவற்றுக்கு நடுவில் 1200 விடுதலைப்புலிகள் தற்கொலைக்கு ஒப்பாக பால்ராஜ் தலைமையில் தரையிறங்கியிருந்தனர்.


 இந்தப் படையணியில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி உட்பட இன்னும் பல படையணிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் 13 இராணுவத்தினருக்கு சமனாகவே களமிறக்கப்பட்டிருந்தனர். பால்ராஜ் தலைமையில் 1200 விடுதலைப்புலிகளும் குடாரப்பில் தரையிறங்கியிருக்க இன்னும் 3 படைப்பிரிவுகளைச் சேர்ந்த 450 விடுதலைப்புலிகள் நீரேரியை கடந்து ஏ9 வீதியை பளைக்கும் முகமாலைக்கும் இடையில் ஊடறுத்தனர். தமது கோட்டைக்குள் விடுதலைப்புலிகள் தரையிறங்கிவிட்டதால் பேரதிர்ச்சியடைந்த இராணுவ தலைமைப்பீடம் கொழும்பிலிருந்து பலாலிக்கு வந்து தரையிறங்கியது.



அப்போது இராணுவத் தளபதியாகவிருந்த லெப் ஜெனரல் சிறீலால் வீரசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேரா, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி ஆகியோர் மேஜர் ஜெனரல் பலேகல்லவுடன் பலாலி வந்திறங்கினர்.
bricadiar_balraj_006 இதையடுத்து, தரையிறங்கிய விடுதலைப்புலிகள் மீது அரசின் முப்படையும் முழு வேகத்தாக்குதல்களை தொடுத்தன. ஆட்லறிகள், விமானங்கள், கடற்படைக்கப்பல்கள் குண்டுமழை பொழிய பால்ராஜ் தலைமையிலான அணிமீது பாய்ந்தது இராணுவம். இந்த தாக்குதலில் இராணுவமும் தனது சிறப்பு கொமாண்டோக்களையும் பிரிகேட்களையும் களமிறக்கியது. விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணிக்கும் இராணுவத்தின் சிறப்பு படையணிகளுக்குமிடையில் பெரும் போர்மூண்டது. பால்ராஜ் தலைமையில் தரையிறங்கிய சிறப்பு படையணியுடன் இலங்கை இராணுவம் 34நாட்களாக போரிட்டது. இராணுவத்தின் யுத்தடாங்கிகளாலும் பறக்கும் டாங்கிகளென வர்ணிக்கப்படும் எம்.ஐ.24ரக யுத்தக் ஹெலிகளாலும் பால்ராஜின் படையணியை நிலைகுலையவோ அல்லது பின்னகர்த்தவோ முடியவில்லை.
மாறாக புலிகளின் தாக்குதலில் பல டாங்கிகள் சிதறடிக்கப்பட்டன. சிறப்பு படையணிகள் சின்னாபின்னமாக்கப்பட்டன. தரையிறங்கிய விடுதலைப்புலிகளை அழிக்க முடியாததினால் ஆத்திரமடைந்த இராணுவ உயர்பீடம் தாக்குதலில் ஈடுபட்ட சிறப்பு படையணியான 53ஆவது படையணியின் தளபதி பிரிகேடியர் காமினி ஹெட்டியாராச்சி, மற்றும் கேணல் ரொசான் சில்வா ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்துவிட்டு மேஜர் ஜெனரல் சிசிர வீரசூரியவை நியமித்தது. அவராலும் முடியாது போகவே இராணுவத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை களத்தில் இறக்கியது. ஆனாலும், இராணுவத்தின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது.
ஆனையிறவு பெருந்தளத்தை விடுதலைப்புலிகளின் ஏனைய படையணிகள் சுற்றிவளைத்து தாக்கிக்கொண்டிருக்க, அத்தளத்தின் இதயப்பகுதிக்கும் வெறும் 1200 போராளிகளுடன் தரையிறங்கி இராணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய பால்ராஜின் படைநகர்த்தல் தொடர்பில் சர்வதேச நாடுகளின் இராணுவ வல்லுநர்களே தமது ஆச்சரியங்களை வெளிப்படுத்தியிருந்ததுடன் இத்தரையிறக்கத்தை தற்கொலைக்கு ஒப்பானது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.குடாரப்பு-தரையிறக்கம்-1
பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கத்தின் மூலம் வன்னிக்கும் யாழ்.குடாநாட்டுக்குமிடையில் பலமைல் விஸ்தீரணத்தில் பரந்து விரிந்துகிடந்த ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் தகர்த்தழிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான படைவீரர்கள் கொல்லப்பட்டனர். பெருந்தொகை இராணுவ தளபாடங்கள் புலிகள் வசமாகின. தன்மானப் போராக இருதரப்புக்குமிடையில் இடம்பெற்ற ஆனையிறவு சமரில் தமிழினம் வெற்றிக்கொடி நாட்டியது. ஆனையிறவு தளத்தை கைப்பற்றுவதற்காக முன்னர் விடுதலைப்புலிகள் நடத்திய ஆகாய கடல் வெளிச்சமரை, கட்டைக்காட்டில் இராணுவத்தின் பெரும் படையணியொன்றை தரையிறக்கியதன் மூலமே இராணுவத்தினர் முறியடித்திருந்தனர். இதனைப் படிப்பினையாக வைத்தே தமது அடுத்த முற்றுகையின் போது கட்டைக்காட்டு தரையிறக்கத்துக்கு பதிலடியாக குடாரப்பு தரையிறக்கத்தை மேற்கொள்ள வேண்டுமென திட்டம் வகுத்தவர் பால்ராஜ். அதில் அவர் வெற்றியும் கண்டார். ஆனையிறவு வெற்றிக்கு பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கமே முத்தாய்ப்பாய் அமைந்ததுடன் அது ஒரு புதிய போரியல் வரலாற்றினையும் ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.