தமிழரசுக்கட்சி காரைநகரில் சுயேச்சை அணியை குத்தகைக்கு எடுக்க தீவிரம்!

காரைநகர் பிரதேசசபையை கைப்பற்றுவதற்கான தீவிர முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. இங்கு அதிக ஆசனத்தை மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக்குழு பெற்றுக்கொண்ட போதும், சுயேச்சைக்குழுவை வளைத்து தவிசாளர் பதவியை பங்கு போட தமிழரசுக்கட்சி தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன்படி தமிழரசுக்கட்சி, சுயேச்சைக்குழு தலா இரண்டு வருடம் தவிசாளர் பதவியை வகிப்பதென ஒரு யோசனையை தமிழரசுக்கட்சி வைத்தது. எனினும், தமது தரப்பு முதலாவது இரண்டு வருட தவிசாளராக இருக்க வேண்டுமென சுயேச்சை அணி கூறுகிறது. தமிழரசுக்கட்சி இதற்கு சம்மதமில்லை. தமது தரப்பு முதலாவது தவிசாளர் பதவியை வகிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.
இந்த சிக்கலை தீர்க்க, அந்த சுயேச்சை அணியை மொத்தமாக தமிழரசுக்கட்சிக்குள் இணைக்கும் திட்டத்தையும், தமிழரசுக்கட்சி முன்வைத்துள்ளது. இதற்கு அரைமனதுடன் சுயேச்சை அணி ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆனால், இந்த திட்டத்திற்கு ரெலோ இடையூறாக இருக்கிறது. மாகாணசபை தேர்தலிற்கு சுயேச்சை அணியின் உதவி தேவையென்பதால், அவர்கள் தமிழரசுக்கட்சியில் இணைவதை தடுக்க இரகசியமாக காய் நகர்த்தி வருகிறார்கள்.இதனால் இணைவு முயற்சிகள் காலதாமதமாகி வருகின்றன.
காரைநகர் பிரதேசசபைக்கான தவிசாளர் தேர்வு நாளை காலை நடக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.