இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15% வரி!

இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு, அதன் பெறுமதியின் அடிப்படையில் 15% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய தேவையிலும் அதிகளவான தங்க இறக்குமதியை ஒழுங்குபடுத்தல் மற்றும் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் அதிகளவான தங்க கடத்தலை கட்டுப்படுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு, இவ்வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்திரம் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் எடை 9,000 கிலோ கிராம் மாத்திரமேயாகும். இது 2017 இல் 15,000 கிலோ கிராம் ஆக அதிகரித்துள்ள நிலையில், இவ்வருடத்தின் முதல் 03 மாதங்களுக்குள் 8,000 கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு ஏற்ப, தங்க ஆபரண உற்பத்தியோ ஆபரண ஏற்றுமதியோ அதிகரிக்கவில்லை என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் இது வரை இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு வரி அறவிடப்படாத நிலையில், அதனை சாதகமாகப் பயன்படுத்தி கடத்தல்காரர்களால் இலங்கைக்கு தங்கம் கடத்தப்பட்டு இங்கிருந்து வேறு நாடுகளுக்கும் அது கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம், ரூபா 17 கோடி பெறுமதியான தங்கம் கடத்தலின்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தங்க இறக்குமதியை ஒழுங்குபடுத்துவதற்கும், கடத்தலை கட்டுப்படுத்துவதற்குமாக இலங்கை அரசாங்கத்தினால் இவ்வரி விதிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.