பிரதி சபாநாயகர் உட்பட 16 பேருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால உட்பட சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 16 பேருக்கு எதிராக இன்று சபாநாயகரிடம் கையளிக்கவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணையை திங்கட்கிழமை காலை கையளிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

சுதந்திரக் கட்சியினர் 16 பேருக்கு எதிராக இன்று கையளிக்கவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்தின் கூட்டு பொறுப்புக்கு பங்கம் விளைவித்தமையை அடிப்படையாக கொண்டு சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி சபாநாயகர் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று கையளிக்க தயாரா இருந்தோம்.
இதன்படி இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 20 பேர் கையொப்பமிட்டுள்ளனர். எனினும் இன்றைய தினம் அனுதாப பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்பட்டமையினால் சபாநாயகர் கரு ஜயசூரிய தமது சபாநாயகர் ஆசனத்தில் இருந்து எழுந்து வெளியேவரவில்லை. இதன்காரணமாக இன்று பிற்பகல் 2 மணிக்கு கையளிக்கவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிக்க முடியாமல் போனது.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் 16 பேருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை திங்கட்கிழமை காலை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.