16 பேருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்த சுதந்திரக் கட்சியினர் 7 பேருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்று விட்டு 16 பேருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதனையடுத்து நாளைய தினம் 16 பேருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிக்க ஐக்கிய தேசியக் கட்சி உத்தேசித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த நான்காம் திகதி விவாதத்திற்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 பேர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்தனர். அத்துடன் 23 பேர் வாக்களிக்க வருகை தரவில்லை. 
இதனையடுத்து பிரதமருக்கு எதிராக வாக்களித்தாலும் தொடர்ந்து அரசாங்கத்திலேயே இருப்போம் என சுதந்திரக் கட்சி தெரிவித்தமை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும் எதிர்ப்பினை வெளியிட்டனர். அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து விட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பது வெட்கத்தனமாக செயலாகும் என பகிரங்கமாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்தனர். 
அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த 16 பேரையும் விலக்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தில் இருந்தால் எம்மால் சிறப்பாக பயணிக்க முடியாது என்றும் கடிதம் மூலமாகவும் வாய்மூலமாகவும் ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர். 
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய முன்னணியினரும் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உரிய நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.