வங்கியில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை வட்டி பெறுவோருக்கு வரி!

அரசாங்கத்தின் புதிய இறைவரிச் சட்டம் காரணமாக அரச ஊழியர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக சில சமூக ஊடகங்கள் தவறான பிரசாரம் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணத்திற்காக ஒருவர் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை (1,25,000) வட்டியாகப் பெற்றுக்கொள்வாரேயானால் அந்த வட்டிக்கு மட்டுமே வரி அறவிடப்படுமெனவும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
சில சமூக ஊடகங்கள் இறைவரி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. அரச ஊழியர்கள், சாதாரண மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தும் திட்டம் இதுவென வதந்திகளை பரப்பி வருகின்றன. அரசு ஊழியர்கள், சாதாரண மக்களுக்கு எந்த வரியும் சுமத்தப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போது இறைவரி குறித்து எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய இறைவரிச்சட்டம் காரணமாக ஓய்வூதியம் பெறுவோரும், அரச ஊழியர்களுமே இலக்குவைக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது முற்றிலும் பிழையான தகவலாகும். ஓய்வூதியம் பெறுவோர், அரசு ஊழியர்கள் எவரிடமிருந்தும் வரி அறவிடப்படமாட்டாது. மக்கள் இது விடயத்தில் அச்சம்கொள்ளத் தேவையில்லை.
புதிய வரி முறையின்படி யாராவது வங்கியில் வைப்பிலிட்ட தொகைக்கு வட்டியாக 125,000 ரூபாவை பெற்றால், அதற்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும். வைப்பிலிட்ட தொகைக்கு வரி அறவிடப்படமாட்டாது.
இந்த ஊடகங்கள் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை குழப்பியுள்ளன.
125,000 ரூபா வட்டியாக வரவேண்டுமானால் வைப்பிலிடப்படும் தொகை இரண்டு கோடி ரூபாவாக இருக்கும். அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோரிடம் வங்கியில் இரண்டு கோடி வைப்பிலிட முடியுமா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.