400 நாட்களைக் கடந்தும் எதுவித தீர்வுகளும் எட்டப்படவில்லை!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று தெரிவித்துள்ளனர்.


முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 400 நாட்களைக் கடந்தும் எதுவித தீர்வுகளும் எட்டப்படாது நகர்கின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமக்குக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் நம்பிக்கையில்லை என்பதுடன் இந்த அலுவலகம் எமக்கான தீர்வைப் பெற்றுத்தரும் என எதிர்பார்த்தும் நாம் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

சர்வதேசத்தைச் சமாதானப்படுத்துவதற்காகவே இலங்கை அரசாங்கம் இந்த அலுவலகத்தை அமைத்துள்ளதுடன் இதுவொரு ஏமாற்று வேலை என்பதும் சர்வதேசத்திற்கு தெளிவாகத் தெரியும். ஆனால் இவை எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் எமது அரசியல்வாதிகளையும் சர்வதேசத்தையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இன்று எமது போராட்டம் 400 நாட்களைக் கடந்துள்ள நிலையில், அரசாங்கமோ எமது விடயத்தில் பாராமுகமாகப் பாரபட்சத்துடன் நடந்து கொள்கின்றது. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வெறும் கண்துடைப்பிற்காக அமைக்கப்பட்ட ஒன்றாகவே நாங்கள் கருதுவதுடன் எம்மை ஒரு பொறிக்குள் தள்ளி விடும் நோக்கிலேயே குறித்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே எமக்கான தீர்வினைச் சர்வதேசம் சார்ந்து வழங்காது போனால் எமது போராட்டம் தொடரும் என்பதுடன், நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் எமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை ‘ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.