சிரியா தாக்குதல் துல்லியமாக நடந்தது, நோக்கம் நிறைவேறியது!

சிரியா மீதான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும், நோக்கம் நிறைவேறியதாகவும் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
சனிக்கிழமை மாலை வெளியிட்ட ஒரு டிவிட்டர் பதிவில் இதைத் தெரிவித்த டிரம்ப், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் (இந்தத் தாக்குதலில் பயன்படுத்திய) அறிவுக்கும் படை வலிமைக்கும் நன்றி கூறியுள்ளார். இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர் நோக்கம் நிறைவேறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுப் படையினர் சிரியாவில் அரசுக்கு சொந்தமான மூன்று இடங்கள் மீது சனிக்கிழமை குண்டு வீசினர். ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படும், இருப்புவைக்கப்படும் இடங்கள் என்று அவற்றை இந்த நாடுகள் குறிப்பிட்டன.
கடந்த வாரம் டூமா நகரில் சிரியாவின் அரசுப் படைகள் நடத்தியதாகச் சொல்லப்படும் ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலை மிகவும் கடுமையான முறையில் கண்டிப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்தார்.
சிரியாவின் நட்பு நாடான ரஷ்யா, அந்த நாட்டில் உள்ள தமது படையினர் தாக்கப்பட்டால் ராணுவ ரீதியாக பதிலடி தரப்படும் என்று எச்சரித்தது.
காட்டுமிராண்டித் தனத்துக்கு எதிராக தமது நியாய உரிமை உள்ள வலிமையை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை செயல்படுத்திக் காட்டியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.