ஐவரின் உயிரை காவு கொண்ட ஹொரண இறப்பர் தொழிற்சாலை!

ஐவரின் உயிரை காவு கொண்ட ஹொரண பெல்லப்பிட்டிய
இறப்பர் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுமாறு மதுராவெல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் குறித்து அரச பகுப்பாய்வு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர். ஹொரண பெல்லப்பிட்டிய இறப்பர் கைத்தொழிற்சாலையில் அமோனியம், தாங்கியொன்றுக்குள் வீழ்ந்ததனாலும் நச்சு வாயுவை சுவாசித்ததனாலும் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் சிகிக்சைகளுக்கென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 18 பேர் இதுவரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதுடன் இருவர் அதி தீவிர சத்திரசிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹொரண ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தமர கலுபோவில தெரிவிக்கின்றார். குறித்த தொழிற்சாலை சூழல் சட்டத்திட்டங்களை மீறி செயல்பட்டு வந்தமை உறுதி செய்யப்பட்டமையையடுத்து அதனை மூடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டதாக மதுராவெல பிரதேச சபையின் தலைவர் புஷ்பஜித் சீலவிக்ரம தெரிவிக்கின்றார்.
சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டுள்ள இறப்பர் தொழிற்சாலையின் முகாமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதேவேளை அரச பகுப்பாய்வாளர்கள் குறித்த கைத்தொழிற்சாலை வளாகத்திற்கு வருகை தந்து விசாரணைகளை நடாத்தவுள்ளதாகவும் அதன் அறிக்கை ஹொரண மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.