ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

தம்மால் நடத்தப்படும் மேலதிக வகுப்புகளுக்கு வருமாறு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாடசாலையில் அழுத்தம் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் தொடர்பில் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

விசேடமாக 5ம் ஆண்டு புலமைப்பரிசிலை இலக்காக கொண்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களில் மாணவர்களை பங்கு கொள்ள செய்வது தொடர்பில் சில ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் அழுத்தம் தொடர்பாக சில பெற்றோர்கள் தனிப்பட்ட ரீதியில் தகவலை வழங்கியிருப்பதாகவும் கல்வியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

கல்வியமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

சில ஆசிரியர்கள் முன்னெடுக்கும் வகுப்புக்களில் கலந்து கொள்ளாதாக மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியரால் பாடசாலையில் பல்வேறு வகையில் இடையூறுகள் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதற்கமைவாக கல்வியமைச்சின் உடனடி தொலைபேசியினுடாக 1988 இது தொடர்பான தகவலை பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.