திருவண்ணாமலை வந்த தமிழிசைக்கு கருப்பு கொடி!


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தமிழக பாஜ தலைவர் தமிழிசைக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற 25 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலையில் நேற்று பாஜ சார்பில் மகாசக்திகேந்திரம், சக்தி கேந்திரம் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பாஜ தலைவர் தமிழிசை பங்கேற்றார். திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே, ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து விட்டதாக கூறி அவருக்கு கருப்பு கொடி காட்ட நின்றிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வந்து, கருப்பு கொடி காட்ட முயன்ற 25 பேரை கைது செய்து, வேனில் ஏற்றிச்சென்றனர். முன்னதாக தமிழிசை நிருபர்களிடம் கூறுகையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருமா? என்பது சந்தேகம்தான். மத்திய அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் நடந்து வருகிறது. ராகுல்காந்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் தமிழகத்துக்கு காவிரி விவகாரத்தில் நியாயம் வழங்குங்கள் என்று கூற தயாரா? காவிரி விவகாரத்தில் அணைகளின் உரிமையை இங்குள்ள ஆளும் கட்சியினர் விட்டுக்கொடுப்பார்களா? மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் காவிரி விவகாரத்தில் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.