கனகராயன்குளத்தில் அன்னை பூபதி நினைவாக துடுப்பாட்டம்!

தமிழர்களின் பசி அடக்க தான் பசித்திருந்து உயிர்நீத்த தேசத்தாய் அன்னை பூபதியின் ஞாபகார்த்தமாக கனகராயன்குளம் ஐக்கிய விளையாட்டுக் கழகம் மென்பந்துச் சுற்றுப்போட்டியொன்றை நடத்தியிருந்தது. 
மென்பந்து போட்டிகளின் தெரிவு, காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் கடந்த வாரம் கனகராயன்குளம் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இருந்து 12 அணிகள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தன. இன்று (31) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மன்னார் மடு அணியை எட்டு இலக்குகளால் வெற்றிகொண்டது கனகராயன் குளம் ஐக்கிய விளையாட்டுக்கழக அணி. 
இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக கனகராயன் ஐக்கியம் அணியின் சியாந்தன் தெரிவுசெய்யப்பட்டார். இவர் முப்பத்தொரு ஓட்டங்களை (நான்கு ஆறு ஓட்டங்கள் அடங்கலாக) அதிரடியாக பெற்றுக்கொண்டவர். 
தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இரண்டு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை வென்ற கனகராயன் ஐக்கியம் அணித்தலைவர் மிதுர்சன் (மொத்த ஓட்டங்கள் 61- ஏழு ஆறு ஓட்டங்கள் அடங்கலாக) தெரிவு செய்யப்பட்டார்.
சிறந்த பந்து வீச்சாளராக மடு ஐக்கியம் அணியின் வீரர் சுதன் (நான்கு பந்துப்பரிமாற்றங்களில் ஐந்து இலக்குகள்) தெரிவு செய்யப்பட்டார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.