வைகையில் நாளை இறங்குகிறார் கள்ளழகர்!

மதுரை அருகே அழகர்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. நேற்று இரவு 7.05 மணிக்கு 18ம்படி கருப்பணசுவாமி கோயில் முன், வையாழியாகி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். வழியில் உள்ள கள்ளந்திரி, அப்பன்திருப்பதி மண்டகப்படிகளில் எழுந்தருள்கிறார். இன்று காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்து கள்ளழகரை வரவேற்பார்கள். விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை அதிகாலை 5.45 – 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறும்.

விழாவையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வைகை ஆற்றில் அழகர் இறங்கும்போது, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை சூடி இறங்குவது வழக்கம். இதற்காக விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிய மாலையை, மதுரைக்கு அனுப்பும் நிகழ்ச்சி ஆண்டாள் கோயிலில் நேற்று நடைபெற்றது.  முன்னதாக பிரம்மாண்டமான மாலையை தயார் செய்து ஆண்டாளுக்கு அணிவித்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆண்டாள் சூடிய மாலை, கிளி, வஸ்திரம் ஆகியவற்றை மேள தாளங்கள் முழங்க, மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் மதுரைக்கு கொண்டு சென்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.