நடிப்புக்கு திரும்பிய ஸ்ருதி ஹாசன்; ஆர்.ஜேவாக நடிக்கும் ஜோதிகா!

இந்த வார கோலிவுட்சினிமா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இடைவெளிக்கு பிறகு நடிப்புக்கு திரும்பிய ஸ்ருதி ஹாசன்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார். இறுதியாக பிரமாண்ட பொருட்செலவில் உருவாகவிருக்கும் சங்கமித்திரா படத்தில் ஒப்பந்தமாகி பின்னர் விலகினார். இதனால் அவரின் தந்தை கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு படம் மட்டுமே இருந்தது. ஆனால் அந்த படமும் பாதியில் தடைப்பட்டு நிற்கிறது. இதனால் வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார் ஸ்ருதிஹாசன். சின்ன இடைவெளிக்கு பிறகு சென்னை திரும்பிய ஸ்ருதி ஹாசன், ஹிந்தியில் வித்யூத் ஜம்வால் ஹீரோவாக நடிக்கும் ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது. அதில் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டுள்ளார்.
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை விரைவில் வெளியிட திட்டம்
அரவிந்த் சாமி, அமலாபால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான Baskar the Rascal படத்தின் உரிமையை வாங்கி தமிழில் உருவாக்கியுள்ளனர். மலையாளத்தில் இயக்கிய சித்திக்கே தமிழிலும் இயக்கியுள்ளார். இந்த படத்தின் வேலைகள் கடந்த ஆண்டே முடிவடைந்தது. இதனால் கடந்த பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டனர். ஆனால் அந்த தேதியில் மூன்று பெரிய படங்கள் வெளியானதால் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியது. இதன்பின் இரண்டு ரிலீஸ் தேதிகளை அறிவித்தனர். ஆனால் அந்த தேதிகளிலும் வெளியிட முடியாமல் போனது. இந்த நிலையில் வரும் 27ம் தேதி பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கு தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மீண்டும் இணையும் ராதாமோகன் - ஜோதிகா கூட்டணி
ஜோதிகா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படம் மொழி. இந்த படத்தை ராதாமோகன் இயக்கியிருந்தார். மொழி வெளியாகி பத்து ஆண்டுகளை கடந்திருக்கும் நிலையில் மீண்டும் ராதாமோகன் - ஜோதிகா ஆகியோர் இணைந்துள்ளனர். ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த தும்ஹாரி சூலு படத்தை ரீமேக் செய்கின்றனர். இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டனர். ஆனால் படத்தின் தலைப்பை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது "காற்றின் மொழி" என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முதல் கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் காற்றின் மொழி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜோதிகா 36 வயதினிலே படத்தில் குடும்ப தலைவியாகவும், மகளிர் மட்டும் படத்தில் ஆவணப்பட இயக்குனராகவும், நாச்சியாரில் துணிச்சல் மிக்க போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து காற்றின் மொழி படத்தில் பகலில் குடும்ப தலைவியாகவும், இரவில் ரேடியோ ஜாக்கியாகவும் (ஆர்.ஜே) நடிக்கவுள்ளார் ஜோதிகா.
மீண்டும் படம் இயக்குகிறார் சேரன்
இயக்குனர் சேரன் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ஜி.கே எனும் நண்பனின் வாழ்கை. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதனால் இயக்கத்திற்கு சற்று இடைவேளை கொடுத்த சேரன், தற்போது சாய் ராஜ்குமார் இயக்கும் "ராஜாவுக்கு செக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். மாறுபட்ட கதை களத்துடன் ராஜாவுக்கு செக் உருவாகிறது. சத்தமில்லாமல் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. யுத்தம் செய், முரண், ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சேரன். அந்த வரிசையில் ராஜாவுக்கு செக் படமும் இடம்பெறும் என்று கூறுகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து ஒரு முன்னணி ஹீரோவை வைத்து புது படத்தை இயக்க சேரன் முயற்சி செய்துவருகிறார். இதற்கான ஒரு கதையையும் அவர் தயார் செய்து வைத்துள்ளாராம்.
அடுத்த கட்டத்திற்கு செல்லும் வசந்த் ரவியின் புதிய படம்
ராம் இயக்கத்தில் ஆண்டிரியா நடிப்பில் வெளியான படம் தரமணி. விமர்சன ரீதியாக வெற்றியடைந்த அந்த படத்தில் வசந்த் ரவி என்பவர் ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளையும் அள்ளினார். இந்த நிலையில் ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் புஷ்கர் காயத்ரி ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலை செய்த அருண் மாதேஸ்வரன் இயக்கும் புது படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் வசந்த் ரவி. அதில் வில்லனாக நடிக்க இயக்குனர் மிஷ்கின் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். அதேபோல் ஜில் ஜங் ஜக், அவள் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவை கொடுத்த ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தை இயக்கும் அருண் மாதேஸ்வரன் இறுதி சுற்று படத்திற்கு வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் விரைவில் தொடக்கம்
2013இல் வெளியாகி விமர்சன ரீதியில் வெற்றியடைந்த படம் மூடர் கூடம். நவீன் என்ற புதுமுக இயக்குனர் டைரக்ட் பண்ணி அதுல ஹீரோவாகவும் நடித்திருந்தார். முதல் படம் விமர்சகர் மத்தியிலும் சினிமா துறையினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றதால் உடனடியாக தன்னுடைய இரண்டாவது படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு ஒரு வித்தியாசமான கதை தயார் செய்துள்ளார் நவீன். அந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதல்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். அந்த படத்தில் ஹீரோவாக நடித்து இசையும் அமைக்கவுள்ளார் விஜய் ஆண்டனி. ஹீரோவை தவிர மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. சிவா தயாரிக்கிறார்.
எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு
கோலிவுட் சினிமாவில் இருக்கும் இளம் நாயகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர். இவருடைய நடிப்பில் வெளியான கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி ஆகிய படங்கள் வெற்றியடைந்தன. இந்த படங்களுக்கு பிறகு வெளியான வெள்ளக்காரதுரை, சத்ரியன், நெருப்புடா போன்ற படங்கள் அவருக்கு சறுக்கலை ஏற்படுத்தின. இந்த நிலையில் தற்போது "பக்கா" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.எஸ் சூர்யா இயக்கியிருக்கிறார். காமெடி கலந்த கமர்ஷியல் படமாக பக்கா எடுக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் பிரவை தவிர, சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, சிங்கமுத்து ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோல் ஹீரோயின்களாக நிக்கி கல்ராணியும், பிந்துமாதவியும் நடித்திருக்கின்றனர். பக்கா படத்தின் எல்லா வேலைகளும் முடிந்துள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கின்றனர். பக்கா படம் சரிவில் இருக்கும் விக்ரம் பிரபுவை ஏற்றத்திற்கு கொண்டுவருமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
சூர்யா நடிக்கும் படத்தின் திரைப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம் NGK. இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். NGK படத்திற்கான சூட்டிங் முட்டுகாடு பகுதியில் நடைப்பெற்றது. அதை தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் அம்பாசமுத்திரம் பகுதியை செட் அமைத்து அதில் முக்கியமான சில காட்சிகளை படமாக்கினர். இதன் பின் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம் தொடங்கியதால் NGK படத்தின் சூட்டிங்கை நிறுத்தினர். ஒரு மாத காலமாக நடந்துவந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மீண்டும் NGK சூட்டிங்கை தொடங்கியுள்ளனர். இதில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் பங்கேற்று நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முழு சூட்டிங்கையும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரு மாத காலம் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் NGK சூட்டிங் முடிய காலதாமதம் ஆகும் என்று தெரிக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.