அமெரிக்க – வட கொரிய பேச்சுவார்த்தை!

வட கொரியாவுடனான பேச்சுவார்த்தைகள் “அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் நடைபெறலாம்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“இது ஒரு முக்கியமான சந்திப்பாக இருக்கும்” என்றார் அவர்.
இந்நிலையில், பியாங்யாங்கில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை “சிறப்பாக அமைந்ததாக” அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ தெரிவித்திருந்தார்.
கொரிய தீபகற்பத்தில் அணுசக்தியை அகற்ற இணைந்து செயல்பட கிம் மற்றும் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் ஒப்புக் கொண்டுள்ளனர்.
1953-ம் ஆண்டு கொரிய போர் முடிந்த பிறகு, தென் கொரியாவுக்குள் நுழையும் முதல் வட கொரிய தலைவராகியுள்ளார் கிம் ஜாங்-உன்.
இந்நிலையில், வாஷிங்டனில் நடைபெற்ற பேரணியில் பேசிய அதிபர் டிரம்ப், “வட கொரியாவுடனான பேச்சுவார்த்தை அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் நடைபெறலாம்” என்றார்.
கொரிய தீபகற்பத்தை அணுசக்தியற்ற பகுதியாக்க நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமையும் என தாம் நம்புவதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லையென்றால், அங்கிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.
இதுவரை இதற்கு வட கொரியா எந்த கருத்தையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் “நல்ல விதமாக நடைபெற்று வருவதாக” கடந்த சனிக்கிழமையன்று அதிபர் டிரம்ப் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை எந்த இடத்தில் நடைபெறும் என்று அமெரிக்க அதிகாரிகள் இன்னும் ஆலோசித்து வருகின்றனர். மங்கோலியா, சிங்கப்பூர் ஆகிய இருநாடுகளும் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.