பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக, மதுரை வைகை ஆற்றில் அழகர் பச்சை பட்டு உடுத்தி இன்று இறங்கினார். தங்கக்குதிரை வாகனத்தில் ஆடி, அசைந்து வந்த கள்ளழகர் பக்தர்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையே வைகை ஆற்றில் இறங்கினார். ஆற்றில் இறங்க வந்த கள்ளழகரை எதிர்சேவை கொண்டு வரவேற்றார் வீரராகவ பெருமாள். இதைக் காண பல லட்சம் பக்தர்கள் குவிந்ததால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது .மதுரை அருகே அழகர்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 18ம் படி கருப்பணசுவாமி கோயில் முன் எழுந்தருளி, தங்கப்பல்லக்கில் அழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். கள்ளந்திரி மண்டகப்படியில் எழுந்தருளி கள்ளழகராக உருமாறியதை தொடர்ந்து அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் உள்ளிட்ட வழியில் உள்ள மண்டக படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வந்த கள்ளழகரை வணங்கி மதுரைக்கு வருமாறு எதிர்கொண்டு பக்தர்கள் அழைக்கும் எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி வந்த கள்ளழகர் மாலை 5 மணியளவில் தல்லாகுளம் அவுட்போஸ்டில் உள்ள அம்பலகாரர் மண்டகப்படியில் எழுந்தருளினார். இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளினார். நள்ளிரவு 12 மணிக்கு குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆகிய அழகர், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடிக்கொண்டார். அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயிலுக்கு வந்தார்.
சரியாக, காலை 5.50 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வந்த அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறுகிறது. இதனை காண லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். விழாவையொட்டி 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.