பிரேரணையை ஆதரித்து வாக்களித்த அமைச்சர்களின் நிலை என்ன?

சுதந்திரக் கட்சி தொடர்ந்து நல்லாட்சிaயில் நீடிக்குமா என்பது குறித்தும் பிரதமருக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களித்த அமைச்சர்கள் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதா இல்லையா என்பது தொடர்பிலும் இன்று நடைபெறும் சு.க மத்திய குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவு எட்டப்படும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
ஜனாதிபதியும் சு.க மத்திய குழுவும் வழங்கும் முடிவிற்கமைய அடுத்த கட்ட அரசியல் செயற்பாடுகள் குறித்து தீர்மானிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இணைந்தே முடிவு எட்டப்படும் எனவும் அவர் கூறினார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஆளும் தரப்பிலுள்ள சு.க அமைச்சர்கள் பிளவுபட்டிருந்தனர். 16 பேர் ஆதரவாக வாக்களித்திருந்ததோடு 26 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இது தொடர்பில் இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இன்றைய மத்திய குழு கூட்டத்தில் இரு சு.க தரப்பும் பங்கேற்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, பிரதமருக்கு எதிரான பிரேரணையில் ஆதரவாக வாக்களித்த 16 அமைச்சர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி பிரதமரினால் ஜனாதிபதியிடம் நேரில் கோரப்பட்டிருந்தது. இதேவேளை தங்களுக்கு அமைச்சு பதவிகளில் இருந்து விலகி எதிரணியில் அமர அவர்களை தாம் தமது கட்சியில் இணைத்துக் கொள்ளத் தயாராகவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் சில தினங்களுக்குள் இது தொடர்பில் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.