இலங்கையில் மூன்று வெவ்வேறு தினங்களில் மே தின பேரணிகள்!

இலங்கையில் மூன்று வெவ்வேறு தினங்களில் மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. மே 1, 6 மற்றும் 7ஆம் திகதிகள் மேதினத்தை நடத்துவதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
எதிர்வரும் மே 6ஆம் திகதி சுகததாச அரங்கில் மேதின நிகழ்வுகளை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளது. இந்நிலையில் ஒன்றிணைந்த எதிரணி மே 7ஆம் திகதி காலியில் மேதினத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதேவேளை, சில  தொழிற்சங்கங்கள் மே முதலாம் திகதி மேதினத்தை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளன.
மே முதலாம் திகதி பொது விடுமுறைத் தின்ததை இரத்து செய்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
அமைச்சர், வஜிர அபேவர்தன அரசியல் யாப்பை மீறி மே முதலாம் திகதி விடுமுறையை இரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கும் இலங்கை வர்த்தக தொழிலாளர் ஒன்றியத்தின் பிரதி பொதுச் செயலாளர், எஸ்.நடேசன், இந்த தீர்மானத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"ஒன்று கூடுவதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்குமான உரிமையை யாப்பு உறுதிப்படுத்தியுள்ளது" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மகாநாயக்கத் தேரர்கள் மேதினக் கொண்டாட்டங்களை ஒத்திவைக்குமாறு கோரிக்கை எதனையும் விடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மே முதலாம் திகதி பொது விடுமுறைத் தினத்தை இரத்து செய்யும் உரிமை அரசாங்கத்திற்கு இல்லையெனத் தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.