கூட்டமைப்பின் நேற்றைய கூட்டத்தில் முடிவில்லை!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுக் கூடி ஆராய்ந்தபோதும் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இன்று மீண்டும் கூடவுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இரு தடவைகள் கூடியதுடன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று அவசரமாகச் சந்தித்திருந்தனர்.
நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் 2ஆம், 3ஆம் திகதிகளில் கூடி ஆராயப்படும் என கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதற்கமைய நேற்று முற்பகல் 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடியது.
சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்ற சந்திப்பில் எந்தவொரு முடி வும் எட்டப்படவில்லை. கூட்டத்தை முடித்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அவசரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சென்று சந்தித்தனர்.
ஜனாதிபதியின் சந்திப்பைத் தொடர்ந்து மீண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணிவரை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்திருந்ததுடன், காரசாரமான கருத்துப்பரிமாற்றங்களும் இடம்பெற்றன.
இந்தக் கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இன்று மீண்டும் கூடி கலந்துரையாடுவதற்கு கூட்டமைப்பினர் தீர்மானித்துள்ளனர். பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை ஊடகங்களுக்குத் தெரிவிப்பதில்லையென முடிவெடுத்திருப்பதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை பிரதமர் தரப்பு தனித்தனியாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்திருந்ததாகவும், பிரதமருக்கு ஆதரவு வழங்குவதாக அவர்கள் கூறியிருப்பதாகவும் கட்சி உள்ளக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.