முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்!

முசலி பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று (11) மாலை 2.30 மணியளவில் முசலி பிரதேச சபையில் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம் பெற்றது. 

தலைவர், உப தலைவர் தெரிவுகள் ஆரம்பமாகி முடியும் வரை முசலி பிரதேச சபைக்கு வெளியில் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் தர்க்க நிலை ஏற்பட்டிருந்தது. 

எனினும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் தலைவர் உப தலைவர் தெரிவுகள் இடம் பெற்றது. குறிப்பிட்ட நேரத்திற்குள் 16 உறுப்பினர்களில் சுமார் 6 உறுப்பினர்கள் மாத்திரமே வருகை தந்திருந்தனர். 

இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்த நிலையில் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அவர்களினால் சுமார் 30 நிமிடம் சபை செயற்பாடுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 

எனினும் குறித்த 30 நிமிடங்களுக்குள் ஏனைய 10 உறுப்பினர்களும் சமூகமளித்திருந்த நிலையில் முசலி பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவுகள் இடம் பெற்றது. 

இதன் போது தலைவர் தெரிவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் கபூர் கலீபத் சுபியான் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஈசான் ஆகியோரது பெயர் முன் மொழியப்பட்டதோடு பகிரங்க வாக்களிப்பிற்கு சபையில் உள்ள 16 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கிய நிலையில் பகிரங்க வாக்களிப்பு இடம் பெற்றது. 

அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அப்துல் கபூர் கலீபத் சுபியான் 9 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஜே.ஈசான் 6 வாக்குகளையும் பெற்றதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் ஒருவர் வாக்களிக்காது நடுநிலை வகித்தார். 

அதிக வாக்குகளைப் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அப்துல் கபூர் கலீபத் சுபியான் முசலி பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து முசலி பிரதேச சபைக்கான உப தலைவர் தெரிவு இடம் பெற்றது. உப தலைவர் தெரிவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த உறுப்பினர் முஹசின் றைசுதீன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் பிலிப் சகாயநாதன் குரூஸ் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டது. 

இதன் போது அனைத்து உறுப்பினர்களும் பகிரங்க வாக்களிப்பிற்கு ஆதரவு வழங்கிய நிலையில் பகிரங்க வாக்களிப்பு இடம் பெற்றது. 

வாக்களிப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த உறுப்பினர் முஹசின் றைசுதீன் 9 வாக்குகளையும், தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் பிலிப் சகாயநாதன் குரூஸ் 6 வாக்குகளையும் பெற்றதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் வாக்களிக்காது நடுநிலை வகித்தார். 

இதன் போது கூடிய வாக்குகளைப் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த உறுப்பினர் முஹசின் றைசுதீன் முசலி பிரதேச சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 

தலைவராக தெரிவு செய்யப்பட்ட அப்துல் கபூர் கலீபத் சுபியானுக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 7 வாக்குகளுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு வாக்கும், பொது ஜன பெரமுனவின் ஒரு வாக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது. 

உப தலைவராக தெரிவு செய்யப்பட்ட முஹசின் றைசுதீனுக்கு ஆதரவாக ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7 வாக்குகளும், பொதுஜன பெரமுனவின் ஒரு வாக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு வாக்கும் கிடைத்தது. 

குறித்த அமர்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான், மாகாண சபை உறுப்பினர்களான பிரிமூஸ் சிறாய்வா, அலிக்கான் சரீப்,எஸ்.எம்.நியாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம், ஹீனைஸ் பாரூக், முத்தலீப் பாரூக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.