ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பொறுப்புக்களுக்குப் புதியவர்கள்

மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பொறுப்புக்களுக்குப் புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஐ.தே.கவின் தலைவர் பதவி தவிர்ந்த ஏனைய பதவிகளுக்கு இளம் உறுப்பினர்களை நியமிப்பதற்கு அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொறுப்புக்களுக்குப் புதியவர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் பத்துப்பேர் அடங்கிய ஆலோசனைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் செயற்படுவதற்கு சனிக்கிழமை கூடிய ஐ.தே.க செயற்குழு தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைய நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் எதுவித மாற்றமுமின்றி கட்சியின் தலைவராக செயற்படுவார். எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கட்சித் தலைவர் பதவியில் தொடர்வார் என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளவர்களின் பதவிக் காலம் ஏப்ரல் 30ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் புதியவர்களின் தெரிவுகள் இடம்பெறவுள்ளன.   
கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்படாவிட்டாலும் கட்சியின் ஏனைய பொறுப்புக்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, இளம் உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படும். கட்சி பொறுப்புக்களை தீர்மானிப்பதற்கு 11 ஐ.தே.க உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்புர்களைக் கொண்டதாக இந்தக் குழுவை அமைக்க முன்னர் தீர்மானிக்கப்பட்டது. 
 
எனினும், செயற்குழுவில் தனக்கு ஆதரவானவர்கள் இருக்கின்றனர் என்ற விமர்சனம் முன்வைக்கப்படலாம் என்பதால் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு தெரிவுசெய்யப்பட்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டினார்.   
கட்சியின் பதவிகள் பற்றிய முடிவுகளை எடுப்பதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள பதினொருபேரைக் கொண்ட குழுவில் நவீன் திசாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, அஜித்.பி.பெரேரா, மங்கள சமரவீவர, ஹரீன் பெர்னான்டோ, அகிலவிராஜ் காரியவசம், இரான் விக்ரமரட்ன, ருவான் விஜயவர்த்தன, கயந்த கருணாதிலக, அசோக பிரியந்த மற்றும் ஜே.சி.அலவத்துவல ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.   
 
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம நேற்று அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் அமைச்சர் கபீர் ஹாசிம் செயலாளர் பதவியிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.