கடவுள் இல்லம்..!

கடலினைப்பார்த்து வெறித்தபடி அமந்திருந்தாள் சங்கவி. அவள் சிந்தனையெல்லாம் எங்கோ இருக்கும் அவள் வாழ்ந்து வளர்ந்த செஞ்சோலைப் பற்றியதாகவே இருந்தது.
ஆமாம் ....ஈழத்தில் நடந்த தொடர் இடப்பெயர்வில் தன் தாய் தந்தையை இழந்த சங்கவி உறவுகள் யாரும் ஏற்காது போக நிற்கதியாக நின்றபோது...உறவாக தாயாக நட்பாக அவளை வளர்த்த இல்லம் செஞ்சோலை. வன்னியில் இருந்த செஞ்சோலையில் தனது பன்னிரண்டு வயதில் இருந்து வளர்ந்து பட்டப்படிப்பை முடித்தவள் என்னும் பெருமைக்கு உரியவள்.
சங்கவி என்னாயிற்று கடலில் என்ன தெரிகிறது ....கப்பல் ஏதும் கவிழ்ந்து போச்சுதோ , என்ற கணவனின் குரலில் சுயநினைவுக்கு மீண்டாள் சங்கவி.. தன்னை சுதாகரித்துக் கொண்ட சங்கவி சொல்லுங்க சானு என்னவாம்,...என்ன வாங்கிக் குடுத்தனீங்க என்றவள் தனது செல்ல மகனை கட்டியணைத்து முத்தமிட்டபடியே
செல்லக்குட்டியா... என்ன வாங்கினீங்க?...அப்பா என்ன வேண்டித்தந்தவர்..என்றாள். சானு சினுங்கியபடி சங்கவியின் மடியில் தொற்றிக்கொண்டான். சிரித்தபடியே தன் ஆசை மகனை அணைத்தபடி...சரி சரி அம்மா வாங்கித்தருகிறேன்...என்றவளை. சங்கவி சரி நேரம் ஆகிறது. உங்களை வீட்டில் விட்டு விட்டு நான் வேறு அலுவலாக வெளியே போகவெண்டும்...என்றான். சரி போகலாம் என்றவள்...சானூவையும் தூக்கி கொண்டு கணவனைப் பின் தொடர்ந்தாள் சங்கவி. வீட்டுக்கு போனதும் ...மனைவி பிள்ளையை விட்டுவிட்டு விரைவாக தனது அலுவலகம் நோக்கிச் சென்றுவிட்டான்.
சங்கவி சானுக்குரிய சாப்பாட்டைச் செய்ய போனவளுக்கு மீண்டும் செஞ்சோலை நினைவு வந்தது. இன்று சானுக்கு நேரத்துக்கு நேரம் உணவை கொடுக்க தாயாக நான் இருக்கிறேன். ஆனால், அன்று எனக்கு என் போன்ற எத்தனை குழந்தைகள் அனாதையாக உணவு இன்றி உறைவிடம் இன்றி இருந்த நிலையை எண்ண தன்னையும் மீறி கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது. அம்மா....அம்மா .. ஏன் அழுகிறீங்கள் என்ற சானுவின் குரலில்... இல்லடா செல்லம் நான் அழுவில்லையடா ...கண்ணுக்குள் தூசு விழுந்துவிட்டது. என்று முத்தம் இட்டபடி ஓடிப்போய் விளையாடிக்கொண்டு இருங்கோ வருகிறேன் என்றாள் சங்கவி.
சானுவும் தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு விரைந்து தன் விளையாட்டை நோக்கி ஓடினான். சங்கவி சாப்பாட்டு வேலையோடு தன் பழைய குழந்தைப் பருவத்தை மறக்கவே அவளால் முடியவில்லை .
அதிகலை எழுந்து குளித்து அத்தனை பேரும் ஒன்றாக அமர்ந்து கடவுளை கும்பிட்டு சாப்பிடுவது வழமை.
ஏதோ ஒரு ஆத்மதிருப்தி இருந்தது. ஓரே மாதிரி உடையில் சின்ன சின்ன சண்டைகள் வந்தாலும் எங்களைப் பார்க்க என்று இருப்பவர்களின் செல்லமான கதைகளில் எத்தனை அன்பு இருந்தது. அம்மா இல்லையென்று ஏங்கியிருந்தாலும்...தவிப்பு இருக்கவில்லை. எத்தனை அரவணைப்பு நினைக்க அவளின் கடந்த காலம் கண்முன்னே விரிந்தன.வெளிநாட்டில் இருந்து வரும் உறவுகள் வந்து பார்ப்பதும் உதவி செய்வதும் உண்மையில் மகிழ்ச்சியே...
அந்த நிலையில் இருந்தாலும் சங்ககி படித்து பட்டம் பெற்று இன்று ஆசிரிய தொழிலில் இருப்பது பெருமையே....
எத்தனை பெருமை இருந்தாலும் இதயம் முழுக்க ரணங்களே. சங்கவி வெளியேறிய பின்பு தான் ...வன்னியில் இராணவ நடவடிக்கை அதிகமானது. இடப்பெயர்வும் அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புக்களும் எத்தனை வேதனை. இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனோர் எத்தனை எத்தனை ...எண்ணிப் பார்த்தால் இதயம் வெடிக்கிறதே. தன்னையும் மீறி சங்கவியின் கைகள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். தாய்போல எங்களைக் காத்த கடவுள் இல்லம் இன்று உருக்குலைந்து போனதே...
தன்னையடக்கமுடியாத சங்கவி தேம்பி தேம்பி அழத்தொடங்கினால்...
ஐயோ என் கடவுளே ஏன் இப்படியெல்லாம் எங்களை தமிழ் இனத்தைச் சோதிக்கிறாய்...என்று கடவுளையும் கையெடுத்து கும்பிட்டாள்.,...உறவுகள் இல்லையென்றாலும் அன்னையைப் போல் உதவிடும் கடவுள் இல்லமான செஞ்சோலை அவள் கண்முன் தாயாக கடவுளாக உயர்ந்து நின்றது. இன்று சங்கவி ஒரு கடவுள் இல்லைத்தை நடத்தி வருகிறாள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் அவளுக்கு ஒரு திருப்தி . தன் கணவரின் ஒத்துழைப்போடு அவள் செய்யும் இந்த நற்செயலை எண்ணி பெருமிதம் கொண்டாள். அவளின் நினைவுகளுக்குள் அம்மா பசிக்கிறது என்ற மழலையின் குரலில் மீண்ட சங்கவி முடிஞ்சுதடா செல்லம்....அம்மா எடுத்திட்டு ஓடி வாறேன் என்றவள் அடுக்களை நோக்கி விரைந்தாள்...
&&...ஜெசுதா யோ...&&

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.