உதயங்க தொடர்பான முக்கிய தீர்மானம் 17 ஆம் திகதி !

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதா இல்லையா என்ற தீர்மானம் எதிர்வரும் 17 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது.

உதயங்க விவகாரத்தில் ஐக்கிய அரபு இராச்சியமானது சில மேலதிக ஆதாரங்களைக் கோரியுள்ள நிலையில் அந் நாட்டுக்கு தேவையான ஆதாரங்களை மையபப்டுத்தி பதிலளிக்கும் செயற்பாடுகளை இலங்கை ஆரம்பித்துள்ள நிலையில், 17 ஆம் திகதிக்கு முன்னர் அது நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும், எதிர்வரும் 17 ஆம் திகதி அல்லது அதனை அண்டிய நாளொன்றில்  உதயங்க தொடர்பில் டுபாய் தீர்க்கமான முடிவொன்றுக்கு வரவுள்ளதாகவும்  அறிய முடிகின்றது.

உதயங்க வீரதுங்கவை இலங்கையிடம் கையளிக்க டுபாய் மேலதிகமாக சில தகவல்களை கோரி அண்மையில் இலங்கைக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்தக்கடிதத்தில் டுபாய் கோரியுள்ள விடயங்களுக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, மிக் விமான கொள்வனவு தொடர்பிலான விசாரணைக் கோவையை கையாளும் சட்ட மா அதிபர் திணைக்கள குழுவின் உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே சர்வதேச பொலிஸாருக்கு மேன் முறையீடொன்றினை சமர்ப்பித்துள்ள உதயங்க, தன்னை இலங்கையானது அரசியல் காரணிகளுக்காகவே நாடு கடத்த கோருவதாக சுட்டிக்கடடியுள்ளார். இந் நிலையிலேயே உதயங்க தொடர்பில் மேலதிக சாட்சிகள் கோரப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அதன்படி இலங்கையானது எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் போதிய சான்றுகளை சமர்பிக்கும் பட்சத்தில் அவரை இலங்கைக்கு நாடு கடத்த டுபாய் நடவடிக்கை எடுக்கும் எனவும் போதிய சாட்சிகள் இல்லாமல் இருப்பின் அவர் டுபாய்க்கு எங்கிருந்து வந்தாரோ அந்த நாட்டுக்கே கடத்தப்படுவார் எனவும் அறிய முடிகிறது.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி, உதயங்க வீரதுங்க சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தலுக்கு அமைய டுபாய் பொலிஸாரால் அஜ்மான் நகரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து அவரை இலங்கையிடம் கையளிக்குமாறு இலங்கை டுபாய் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தது.

2006 ஆம் ஆண்டில்  மிக் - 27 ரக விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் 14 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி தொடர்பில் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபராக கருதி உதயங்க வீரதுங்க தேடப்பட்டு வருகின்றமையும் அது குறித்த வழக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.