தூத்துக்குடிபடுகொலைக்கு நிவாரண உதவி ரூ.20 லட்சமாம்??

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியை 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிசூட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே நிவாரன நிதி அறிவித்திருந்தது. இந்த நிலையில் நிவாரணத் தொகையை உயர்த்தி அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், துரதிருஷ்டவசமாக 13 நபர்கள் உயிரிழந்தது மிகவும் துயரமும், மனவேதனையும் அளித்தது.
உயிரிழந்த நபர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க நான் ஆணையிட்டேன். தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்புவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் அங்கே சென்று உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தோரை சந்தித்தபோது, அவர்கள் நிவாரண நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
அதன் அடிப்படையிலும், நிவாரண நிதியை உயர்த்தி வழங்க கோரும் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, உத்தரவிட்டுள்ளதையும், பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசு பரிசீலினைக்கு எடுத்துக் கொண்டது.
இதன் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை உயர்த்தி, 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கவும், துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாயை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை, ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தியும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.