காணாமல் போனோர் அலுவலகத்தின் 2 ஆவது மக்கள் சந்திப்பு மாத்தறையில்!

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம்
தனது இரண்டாவது மக்கள் சந்திப்பை மாத்தறை மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் நடத்தியது.

காணாமல் போனோர் தொடர்பான குறித்த அலுவலகம் எந்தவித அரசியல் தொடர்பும் கொண்டதல்ல என்றும் இது சுயாதீன அலுவலகம் மட்டுமே என்றும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அலுவலகத்தின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

அத்துடன் இதன் கிளை அலுவலகங்கள், இந்த வருடத்தில் ஒவ்வொரு பிரதேச மட்டத்திலும் அமைக்கப்படும் என்றும் மாத்தறை மாவட்டத்திற்காக பிரதான அலுவலகம் மாத்தறை நகரில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் கருத்துத்தெரிவித்த அவர்,

“1971 ஆம் ஆண்டில் இருந்து காணாமல் போன நபர்கள் குறித்த சரியான தகவல்களும் அவர்கள் கடத்தப்பட்ட இடங்கள் தொடர்பாக தகவல்களும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. இதனால் இவர்களது குடும்பங்கள் இது தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும். இந்த தகவல்களின் அடிப்படையில் விரிவான விசாரணைகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் சேமநலத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதல்ல. இதேபோன்று இந்த குடும்பங்களில் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும்.” என்றார்.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில், காணாமல் போன நபர்களின் குடும்ப உறுப்பினர்கள், சிவில, சமூக அமைப்புக்கள், ஊடகப் பிரதிநிதிகள் ஆகியோரின் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

இதேவேளை 2016 ஆம் ஆண்டு இலக்கம் 14 இன் கீழான காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டத்தின் கீழ் இந்த பணியகம் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஸ்ரீ லங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய நல்லிணக்க பொறிமுறையாக இது சொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.