தனி நபர் பிரேரணையை 3 மாதத்திற்குள் விவாதத்திற்கு எடுக்க முடியும் !

அரசாங்கத்திற்கு தாமதமாக்கும் நோக்கம் இல்லாமலிருந்தால் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையை  3 மாதத்திற்குள் விவாதத்திற்கு எடுக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பினூடாக அனைத்தையும் கொண்டு வருவதற்கே நாம் முனைந்தோம். ஆனாலும் தற்போதைய அரசியல் சூழலில் புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்கான சாத்தியம் முற்றிலும் குறைவாகும். அதன் காரணமாகவே ஜனநாயகத்தை பலப்படுத்தும் 20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தோம்.

 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எமது நாட்டில் பல நெருக்கடிகளை  ஏற்படுத்தியது. அது மாத்திரமின்றி ஜனநாயக நிறுவனங்களின் அதிகாரங்களை தாழ்த்தியுள்ளது. பாராளுமன்றத்தை அதிகாரமற்றதாக மாற்றியுள்ளது. அமைச்சரவையின் நிலைமையும் அப்படியாகும். அந்த முறைமை நீதிமன்ற சுயாதீனத்தையும் இல்லாமல் செய்தது.

ஆகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் 20 ஆவது  திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தனது நிலைப்பாட்டை உடன் அறிவிக்க வேண்டும் என்றார்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.