மண்டைதீவில் கடற்படை காணிகளை நிரந்தரமாக அபகரிக்க தீர்மானம்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் உள்ள பொது மக்களின் 18 ஏக்கர் காணிகளை
கடற்படையினருக்காக நிரந்தரமாக சுவீகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிபீடம் ஏறிய மைத்திரி – ரணில் தலைமையிலான இலங்கையின் தேசிய அரசாங்கம் இராணுவம் உள்ளிட்ட அரச படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதாக சர்வதேச சமூகத்திற்கு  பெரும் எடுப்பில் பிரசாரம் செய்துகொண்டு, மறுபுறம் மறைமுகமாக தமிழ் மக்களின் காணிகளை சுவீகரித்து வருவதாக மண்டைதீவு மக்களும், வடமாகாண சபை உறுப்பினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

யாழ் குடாநாட்டின் தீவுகளில் ஒன்றான மண்டைதீவை 1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் கைப்பற்றிய நிலையில் அங்கு வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

எனினும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 9 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், வேலணை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மண்டைதீவு கிராமத்திலுள்ள 18 ஏக்கர் காணி இலங்கை கடற்படையினரால் இன்னமும் கைவிடப்படாது தொடர்ந்தும் பலவந்தமாக கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

29க்கும் மேற்பட்ட குடியிருப்புக் காணிகளையும், வயல் காணிகளையும் தோட்ட நிலங்களையும், குடிநீர் கிணற்றினையும் கொண்ட 18 ஏக்கர் காணிகளையே கடற்படையினர் சுவீகரித்து வைத்திருக்கின்றனர்.

இதனால் காணி உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் நகரில் வாடகை வீடுகளிலும், உறவினர் நண்பர் வீடுகளிலும், மற்றுமொருவரின் காணிகளில் ஓலைக் குடிசைகளையும் அமைத்து கடந்த 27 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன் மண்கும்பானில் இருந்து குழாய் வழியாக வரும் குடிநீருக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் அவலமும் மண்டைதீவில் நீடித்து வருகின்றது.

அதேவேளை மண்டைதீவில் அமைந்துள்ள கடற்படையினரின் வேலுசுமண கடற்படை முகாம் காரணமாக மண்டைதீவு மீனவர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்திவந்த இறங்குதுறையும் பயன்படுத்த முடியாதுள்ளனர். இதனால் மீனவர்கள் தற்போது வேறு பகுதியில் படகுகளை நிறுத்தி வைப்பதனால், கடும் காற்றுடன் அலை அடித்தால் அடிக்கடி படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பொது மக்களின் காணியை நிரந்தரமாக கடற்படையினரின் வேலுசுமண கடற்படை முகாமுக்காக நிரந்தரமாக சுவீகரிக்கும் வகையில் பொது அறிவித்தலும் வேலணை தெற்கு பிரதேச செயலகத்தினால் ஒட்டப்பட்டுள்ளது.

இதனைடுத்து வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், பா.கஜதீபன் ஆகியோர் மண்டைதீவில் கடற்படையினரால் சுவீகரிக்கப்படவுள்ள காணி உரிமையாளர்களின் பெயர்பட்டியல்களை திரட்டி வருவதுடன், கிராம அலுவலகர், பொதுமக்களையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இதன்போது மண்டைதீவுப் பகுதியில் உள்ள தமது பூர்வீகக் காணிகளில் ஒரு அங்குல நிலத்தினைக் கூட கடற்படையினருக்கு விட்டுக்கொடுப்பதற்கு தாங்கள் இடமளிக்கமாட்டோம் என காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களின் வாழ் விடங்களை விட்டு கடற்படையினர் நிரந்தரமாக வெளியேற வேண்டும் எனவும் மக்கள் தமது சொந்த வீட்டில், நிம்மதியாக வாழ்வதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை ஜனநாயகத்தை நாட்டில் மீண்டும் முழுமையாக நிலைநாட்டியுள்ளதாக ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் பெருமிதமாக பிரசாரம் செய்துவருவது உண்மையெனில், மண்டதீவில் கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்களை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் வலியுறுத்தியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.