எங்களை மன்னித்துவிடுங்கள் மாவீரர்களே..!

 
எங்கள் மாவீரர்களே..!
என்னை மன்னித்து விடுங்கள்
நான் பிறக்கும் முன்னரும்...
நான் பிறந்த பின்னரும்...
நான் வளர்ந்த வேளையும்...
எனக்காய் துயிலுறங்கச் சென்ற
தூய வீரர்களே!
என்னை மன்னித்துவிடுங்கள்
விடுதலை விடுதலை என
முரசறைந்து
அற்ப விட்டில்களுக்காக
விதையாகிப்போனீர்களே!
என்னை மன்னித்துவிடுங்கள்
உங்கள் மரணத்தின் மீது
மரியாதை பெற்ற என் வாழ்வை
பேரானந்தத்தோடு புசிக்க முடியவில்லை
பத்தோ அதற்கும் அதிகமாகவோ
உங்கள் வித்துடல்களின் மீது
மண்தூவி விதைத்த பாவி என் மனதில்
இப்போதும் உங்கள் முகம்
இளையோடுகிறதே..!
துப்பாக்கிகள் மௌனித்தால்
தூயவர் உம் வீரம்
எப்போதும் பேசத்தகாது என
இருக்கிறவர் மத்தியில்த்தான்
நான் இப்போதும் வாழ்கிறேன்
என்னை மன்னித்துவிடுங்கள்
குட்டிமணி,தங்கத்துரை
விக்ரர்,ராதா,
செல்லக்கிளி அம்மான், அப்பையா,
பொன்னம்மான்,கிட்டு,
சங்கர்,மில்லர், திலீபன்,
சிவக்குமார்,அக்கா அங்கையற்கன்னி,
மாலதி,குமரப்பா,புலேந்திரன்,
என வரிசையாய் நீண்ட
வரிப்புலித் தெய்வங்களே..!
உங்கள் பிள்ளை இவனை
பொறுத்தருளுங்கள்..!
எல்லோரையும் போல
உங்களைப் பற்றி பெருமையாய் பேசி
கடக்க பொறுக்குதில்லையே
பெருந்தகைகளே..!
உங்கள் உள்ளத்திலெரிந்த
தேசிய தாகத்தை
நீங்கள் இல்லாத போது எடுத்தெறிய
என்னால் முடியாது
உங்கள் எலும்புகள் மேல்
வாழ்வமைத்த எவராலும் முடியாது
 
நாட்டிலே_எனக்கு_வேலையில்லை_ஆனால்_நாட்டுக்கான_வேலையுண்டென்பதை_நான்_மறக்கவில்லை
ஒருநாள் ஒரு பொழுதேனும்
என் விழிவழி வழியும் கண்ணீரை
தடுத்துவைக்கும் மார்க்கம்தனை
இன்றும் நானறியவில்லை
தமிழீழம் வேண்டிய தன்மான
வீரர்களே..!
இன்று பலருக்கு தமிழே வேண்டாமாம்
இந்த இலட்சணத்தில்
உங்கள் திருவுடல் புதைந்த இடத்தை
தொழுவதற்கு எங்கே அவர்களுக்கு நேரம்..?
உங்கள் தாகம் இலைக்கஞ்சி தாகமல்ல
அது ஈழதாகம்
அது அடங்கும் வரையிலும்
அனலாய் எரியும்
எங்கள் வீரர்களே..!
எமை மன்னித்துவிடுங்கள்
உங்கள் மரணத்தின் மகத்துவத்தை
பெறுமதியாக்கியே
இளைஞர்கள் பலரும்
உயிர் மாண்டு போவோம்
அது முடியாது போனால்
எம் பிள்ளைகட்கு இனவுணர்வை
போதித்தே மடிவோம்
எம் மாவீரர்களே..!
என்னை மன்னித்துவிடுங்கள்
நீங்கள் நேசித்த மண் அப்படியே
கிடக்கிறது
ஆனால் மக்களில் சிலர் மாறிவிட்டார்கள்..!

-அனாதியன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.