மெரினா அருகே போராட்டக்காரர்கள் கைது!

 ஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.


இலங்கை போரில் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்காக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மெரினாவில் நினைவேந்தல் என்ற பெயரிலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

மெரினா பொழுதுபோக்கு இடம் என்பதால், நினைவேந்தல் நடத்த அனுமதியில்லை என காவல்துறை விளக்கம் அளித்தது. இதற்கிடையில் ஈழத்தமிழர்களின் நினைவேந்தலில் 13 இயக்கங்கள் பங்கேற்பதாக அறிவித்திருந்தன.

இதையடுத்து சென்னை மெரினா, சேப்பாக்கம் பகுதிகளில் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாரதி சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. நேப்பியர் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மெரினாவில் நடக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பெண்கள், இளைஞர்கள் என பெருமளவில் கூடினர். மேலும் , திருமுருகன் காந்தி, தெகலான் பாகவி உள்ளிட்டோர் நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கம்; இலங்கை ராணுவத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கம்.

இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு கடற்கரையில் கூடி கண்ணீர் சிந்தக்கூடாதா?; இந்தியாவில் அரசுகள் மாறின துரோகம் மாறவில்லை என்று கூறினார். இதையடுத்து மெரினா நினைவேந்தல் பேரணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கைதாகுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

ஆனால் காவல்துறை அறிவுறுத்தலை தொடர்ந்து நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படுபவர்களை ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.