கண்கள் மூடி நிற்கின்றோம்! முள்ளிவாய்க்கால் பாடல்!

உலகத் தமிழர் மனங்களை அழுத்தி நிற்கும் நீங்காத் துயர் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களில் இந்தப் பாடலை சுபர்த்தனா படைப்பகம் வெளியிடுகிறது. ஆண்டுகள் வேகமாய் ஓடிப் போனாலும், மாண்டு போன சொந்தங்களின் கோலங்கள்.

கண்முன்னே நிற்கின்றது. நீண்ட அந்தத் துயரங்கள் நெஞ்சைக் குற்றிக் கிழிக்கின்றது. நாம் நாடுகள் பலவற்றில் பரந்து வாழ்ந்தாலும், மாற்றான் எங்கள் இனத்தைக் குவித்துக் கொன்று கொண்டாடியதை, அழுது நின்று பார்க்க மட்டும்தானே முடிந்தது.

கண்களைத் துடைத்துக் கொண்டாலும் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது ஈரம். முள்ளிவாய்க்காலில் மாற்றான் வைத்த‌ கொள்ளி, இன்னும் புகையடங்காது இருக்கிறது எமது உள்ள ஆழங்களில் எல்லாம் நம்மவர் கதைகளைச் சொல்லி. காலங்கள் உருண்டு போனாலும், ஆயிரம் கனவுகளோடு மடிந்து போன சொந்தங்களின் சோகங்களை மனதில் முடிந்து அஞ்சலித்து நிற்கிறோம்.

மண்ணுக்குள் புதைவதும், புதைக்கப்படுவதும் விதைகளுக்கு இறப்பல்ல!/ ஒரு நூறு பாடல்களில் சொன்னாலும் தீராத வலிகளின் சிறு துளிகளை இசையில் இருத்த என்னைத் தூண்டிய மூத்தகலைஞர் அன்பு அண்ணன் கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்களுக்கு நன்றி. இந்தப் பாடல் எமது கூட்டு முயற்சிகளின் வார்ப்பு.

குறுகிய நாட்களில் பாடல் வரிகளைக் கொடுத்த போதும், உயிரோட்டமான இசையைத் தந்த தேசிய விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் த.பிரியன். சோகம் தோய்ந்த குரலில் வரிகளுக்கு வலிமை சேர்த்து இசையோடு இசைந்து போன என் அன்புத் தங்கை ஈழத்துக் குயில் பானுகா. பார்ப்போர் கண்கள் பனிக்க வைக்கும் காட்சிகளை தொகுத்த சசிகரன் யோ. பாடலை உரிய நேரத்தில் தருவதாகச் சொன்ன சொல்லைக் காப்பாற்றிய ஷாலினி அக்கா ஆகிய நால்வரையும், அழுகை அடங்க முன்பு உதட்டில் மலரும் சிறு புன்னகைக் குழந்தையாகப் பார்த்து நிற்கிறேன்.


இந்தப் பாடலைக் காட்சிகள் அடங்கிய காணொளியாகவும் த.பிரியன் கொடுத்தபோது, இந்தப் பாடலை அவர் ஒரு தமிழன் என்ற உணர்வுகளோடு பக்தியோடு படைத்திருக்கிறார் என்பதைப் புரிந்து நெகிழ்ந்து போகின்றேன். 

;வலிகளே வழிகளுக்கான திறவுகோல்! ;த.பிரியன் அவர்களின் இசையில் எளி மையான வரிகளில் அன்னையர்களுக்கான பாடலோடும் மீண்டும் வருவேன் .

  https://www.youtube.com/watch?v=2oD98gBJLHc

பிரியமுடன் கி.தீபன்



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.