நிறைவேற்றதிகாரத்தை இரத்து செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் சிறப்பம்சம் வாய்ந்த இந்த முறைமையினை இரத்துச் செய்யும் அதிகாரம் தேசிய அரசாங்கத்திற்கு கிடையாதென பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த கால அரசாங்கத்திலும் தற்போதைய அரசாங்கத்திலும் சர்வதேசம் மட்டத்தில்  ஏற்பட்ட  அரசியல் நெருக்கடிகளின் தீர்வுகளுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒரு பக்க பலமாக காணப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது 
இந்ந சிறப்பம்சம் வாய்ந்த முறைமையினை இரத்து செய்யும் அதிகாரம் தேசிய அரசாங்கத்திற்கு கிடையாது.
தேசிய அரசாங்கம் காலத்திற்கு காலம் தமது  அமைச்சர்களை பழிகொடுத்தே அரசாங்கத்தினை மேற்கொண்டு செல்கின்றது. கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டமையின்  காரணமாக பகிரங்கமாக அமைச்சுப் பதவிகளில் இருந்து பதவி நீக்கம் செய்தவர்களுக்கு தற்போது புதிய அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய அமைச்சு பதவிகள் கிடைக்கப்பட்டுள்ளமை வேடிக்கையாகவுள்ளது.
நாட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தும் நோக்கில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 4 அமைச்சரவை மாற்றம் இடம் பெற்றுள்ளது.  
இதுவரை காலமும்  அமைச்சரவை மாற்றம் மாத்திரமே முறையாக இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த  மாற்றங்களின் காரணமாக மக்களின் வாழ்க்கையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை , ஆகவே புதிய அமைச்சரவை உருவாக்கம் பயனற்றது.
தேசிய அரசாங்கத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாக  அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. 
கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டமையின் காரணமாக தேசிய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில்  இருந்தவர்கள் பகிரங்கமாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு புதிய அமைச்சரவையில் முக்கிய அமைச்சுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை வேடிக்கையாகவே உள்ளது.
தேசிய அரசாங்கம் முறையற்ற நிர்வாகத்தினை முன்னெடுத்து செல்கின்றது என்பதற்கு  இது  சிறந்த எடுத்துக்காட்டாகவே காணப்படுகின்றது. மக்களின் நலன்களை மையப்படுத்தி அரசாங்கம் செயற்படாமல் அமைச்சர்களின் தேவைகளுக்கு மாத்திரமே அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டை  நிர்வகித்து வருகின்றது. தொடர்ந்தும் அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு பாதகமாக காணப்படுவதால் மக்கள் அரசாங்கத்தின் மீது தமது விரக்தியை வெளிப்படுத்துகின்றனர்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் காரணமாக நாடு எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பினை இரத்து  செய்து புதிய அரசியலமைப்பினை கொண்டு வரும் தேவை மக்கள் விடுதலை முன்னணியினருக்கு மாத்திரமே தற்போது காணப்படுகின்றது. 
மக்கள்  எதிர்க்கட்சியாக இருந்துக் கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாகவே தொடர்ந்து அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தி வருகின்றது.
தேசிய அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தமது நலனை மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்படாமல். நாட்டின் எதிர்கால நலன் கருதி செயற்பட வேண்டும் . தேவையற்ற விடயங்களுக்காக அரசாங்கத்தில் அரசியல்வாதிகள் செல்வாக்கு செலுத்தாமல் மக்களின் நலன் பேணும் திட்டங்களுக்கு கவனம் செலுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.