ஐபிஎல்: வெளியேறியது ராஜஸ்தான்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது தகுதிப் போட்டிக்கு
முன்னேறியது. நேற்று (மே 23) நடைபெற்ற தகுதியிழப்புப் போட்டியில் (Eliminator) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஐபிஎல்லின் முதல் தகுதிப் போட்டியில் (Qualifier 1) ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி. இரண்டாம் தகுதிப் போட்டியில் (Qualifier 2) ஹைதராபாத்துடன் மோதும் அணியைத் தீர்மானிக்கும் தகுதியிழப்புப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (மே 23) நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.
நேற்றைய போட்டியில் இரு அணிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் குவித்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 52 ரன்களும், ஆண்ட்ரே ரசல் 49 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் சார்பில் பென் லாக்லின், கிருஷ்ணப்பா கவுதம், ஜோப்ரா ஆர்ச்சர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
170 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ராகுல் திரிபாதி (20), அஜிங்க்ய ரஹானே (46) சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். அதன் பின் களமிறங்கிய சஞ்சு சாம்சன் தன் பங்குக்கு 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்கையில் ராஜஸ்தான் அணி, 16.5 ஓவரில் 126 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 19 பந்தில் 44 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஹென்ரிச் கிலாசன், கிருஷ்ணப்பா கவுதம் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தும் அந்த அணியால் கடைசி மூன்று ஓவர்களில் வெறும் 17 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் ராஜஸ்தான் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆண்ட்ரே ரசல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
குவாலிஃபயர் VS எலிமினேட்டர்
முதல் குவாலிஃபயர்: சென்னையின் வெற்றிக்குக் கடைசி 3 ஓவரில் 43 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அவர்களிடம் 3 விக்கெட்டுகள் மட்டுமே மீதமிருந்தது. அனுபவ வீரர் டூ ப்ளஸ்ஸியின் சிறப்பான ஆட்டத்தால் அந்தப் போட்டியில் சென்னை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எலிமினேட்டர்: நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்குக் கடைசி 3 ஓவரில் 43 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமிருந்தன. இருப்பினும் கிலாசன், ஸ்டூவர்ட் பின்னி, கவுதமின் சொதப்பலான ஆட்டத்தால் ராஜஸ்தான் இந்தத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (மே 25) நடைபெறவுள்ள இரண்டாம் குவாலிஃபயர் போட்டியில் ஹைதராபாத் அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. போட்டி மாலை 7 மணிக்குத் தொடங்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.