விவசாயிகளின் துயர் துடைப்பவர் யாரோ?

தினமும் அதிகாலை வேளை உலகம் விடியா விட்டாலும், அதிகாலை 3 மணிக்கெல்லாம் களுதாவளைப் பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமங்களின் உள் வீதிகளெல்லாம் விடிந்துவிடும்.

அந்த நேரத்தில் ஆண்களும், பெண்களும் டோச் வெளிச்சத்துடன் புறப்பட்டு விடுவார்கள். அது ஏன் என்பதையே இக்கட்டுரை பிரதிபலிக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக்குப் பெயர்போன பகுதிதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள களுதாவளைப் பிரதேசமாகும்.

களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேத்தாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், மகிழூர், போன்ற பல கிராமங்களில் அங்குள்ள மக்கள் கடற்கரை மணலில் போராடி உழைத்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர் என்பதை யாவரும் அறிவார்கள்.

மேற்படி கிராமங்களில் அரச மற்றும் தனியார் துறைகளில் கடைமை புரிபவர்கள் அதிகம் பேர் இருந்தாலும் அநேகமானோர் இந்த மேட்டுநிலப் பயிர் செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஆனாலும் இவ்வாறு விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தற்போது எதிர் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு யாரும் முன்வராத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் ஏங்குகின்றனர்.

வெற்றிலை, மிளகாய், வெண்டி, கத்தரி, வெங்காயம், போன்ற பல மேட்டுநிலப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், அவர்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு உரிய விலை வாசி தற்போது வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளமையினால் விவசாயிகள் தற்போது பெரும் நஷ்ட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த பிரதேசத்தில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் விவசாயிகள் மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தற்போது மிளகாயின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதானால் பயிர்ச்செய்கைக்கு இட்ட முதலைலீட்டைக்கூட மீளப் பெறமுடியாத நிலையில் உள்ளனர்.

தாம் வெயிலிலும், மழையிலும், துவண்டு, துவண்டு, பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டு மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள போதிலும் தாம் உற்பத்தி செய்த மிளகாய்க்குரிய விலையைத் தீர்மானிக்கும் சக்தி தங்களுக்கில்லாமல் அதை இன்னொருவர் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டிருப்பதானது விவசாயத்தில் தாம் எதிர் கொண்டிருக்கின்ற பாரிய சவாலாகவுள்ளது.

வேளாண்மைச் செய்கைக்கு அரசாங்கம் பசளை மானியம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. அது வரவேற்கத்தக்கதாகும். ஆனால் இவ்வாறு மேட்டுநிலப் பயிர் செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு பசளை மானியம் என்பது இன்றுவரை எட்டாக்கனியாகவே உள்ளது.

அதிக விலை கொடுத்து பசளை, மாட்டெரு, மற்றும் கிருமிநாசினி, உள்ளிட்ட பலவற்றை கொள்வனவு செய்து மிளகாய்ச் செய்கைக்கு இட்டுள்ள போதிலும், மிளகாயின் விலை என்பது வெகுவாகக் குறைவடைந்துள்ளதினால் தமது தொழிலை திறம்பட மேற்கொள்ள முடியாத நிலையும் வருமானமுமற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.

அந்த வகையில் இப்பிரதேசத்தில். 30.04.2018 அன்று மரக்கறிகளுக்கான மொத்த விலையைப் பாரத்தால் கிலோ ஒன்றிற்கு மிளகாய் 25ரூபா, வெற்றிலை 70 ரூபா நீலக்கத்தரிக்காய் 75ரூபா, சின்ன வெங்காயம் 120 ரூபா, வெள்ளைக்கத்தரிக்காய் 65 ரூபா, பயற்றங்காய் 80 ரூபா, புடலங்காய் 80 ரூபா, வெண்டக்காய் 65 ரூபா, பாவை 120 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

29.04.2018 அன்று மரக்கறிகளுக்கான மொத்த விலையைப் பார்த்தால் கிலோ ஒன்றிற்கு மிளகாய் 20 ரூபா, வெற்றிலை 75 ரூபா, நீலக்கத்தரிக்காய 60 ரூபா , சின்ன வெங்காயம் 120 ரூபா, வெள்ளைக்கத்தரிக்காய் 50 ரூபா, பயற்றங்காய் 80 ரூபா, புடலங்காய் 80 ரூபா, வெண்னடக்காய் 60 ரூபா, 50 ரூபாய், பாவை 120 ரூபாவாகவும் காணப்பட்டது.

29.04.2018 அன்று மரக்கறிகளுக்கான மொத்த விலையைப் பாரத்தால் கிலோ ஒன்றிற்கு மிளகாய் 20 ரூபா, வெற்றிலை 75 ரூபா, நீலக்கத்தரிக்காய் 60 ரூபா, சின்ன வெங்காயம் 120 ரூபா, வெள்ளைக்கத்தரிக்காய் 50 ரூபா, பயற்றங்காய் ரூபா, புடலங்காய் 80 ரூபா, வெண்னடக்காய் 60 ரூபா, பாவை. 120 ரூபாவாகவும் காணப்பட்டது.

27. 0 .2018 அன்று மரக்கறிகளுக்கான மொத்த விலையைப் பாரத்தால் கிலோ ஒன்றிற்கு மிளகாய் 20 ரூபா, வெற்றிலை 75 ரூபா, நீலக்கத்தரிக்காய் 60 ரூபா, சின்னவெங்காயம் 120 ரூபா, வெள்ளைக்கத்தரிக்காய் 50 ரூபா, பயற்றங்காய் 70 ரூபா, புடலங்காய் 70 ரூபா, வெண்னடக்காய் 60 ரூபா, பாவை 60 ரூபாவாகவும் காணப்பட்டது.

இவ்வாறு மிளகாயின் விலை மொத்த விலை 25 ரூபாவிற்குச் சென்றால் தமது வாழ்வாதாரம் எங்கே போய் நிற்கும் என தெரியாதுள்ளது.

ஒரு கிலோ மிளகாய் ஆயும் கூலி 15 ரூபா, மிளகாய் ஆயும் நபர்களுக்கு உணவு, சிற்றுண்டி, பசளை, இவ்வாறு கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு கிலோ மிளகாய் அறுவடை செய்வதற்குரிய செலவு மாத்திரம் குறைந்தது 100 ரூபாவாகவுள்ளது.

இந்தநிலையில் ஒரு கிலோ மிளகாயை 25 ரூபாவிற்கு விற்பனை செய்தால் எங்கள் நிலமை என்னவாகும் என்பதை இன்றுவரை யாரும் சித்தித்துப்பார்க்காமலிருப்பது வேதனையளிக்கின்றது என களுதாவளைப் பிரதேச மேட்டுநிலப் பயிற்செய்கையாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.

பல அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பலமுறை தெரிவித்தும் இன்றுவரை தமக்கு பசளை மானியத்தை யாரும் பெற்றுத்தரவில்லை, வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் அனுபவிக்கும் சலுகைகளை ஏன் நாங்கள் அனுபவிக்கக் கூடாது? என்பது எமக்கு இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.

ஆனால் களுதாவளைப் பிரதேச மக்கள் மிகுந்த உழைப்பாளிகள், அவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டு வியர்வை சிந்தி முன்னேறுகின்றவர்கள், அம்மக்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என தேர்தல் காலங்களிலும், ஏனைய இடங்களிலும், பலர் மார்தட்டித் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் அதன் பலாபலன்களை இந்த விவசாயிகள் அனுபவித்ததாக சரித்திரமில்லை எனவும் அப்பகுதிவாழ் விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் பொருளாதாரத்தை ஈட்டுக் கொள்வதில் பெரும் பங்கு வகிப்பதில் மரக்கறி வகைகளும் அடங்குகின்றன. ஆனால் அந்த மரக்கறி வகைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குரிய உந்துதலையும் கொடுக்க வேண்டியது சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்புவாய்ந்த தலையாய கடமையாகும்.

இது ஒருபுறமிருக்க இந்த விவசாயிகள் பயன்படுத்தும் வீதிகளை அவதானிப்போமேயானால் பெரும்பாலான வீதிகளும், பள்ளமும், மேடுமாய், குன்றும் குழியுமாய் காணப்படுகின்றன.
அதிகாலையில் எழுந்து தாம் தோட்டங்களுக்குச் சென்று தொழிலில் ஈடுவடுவதற்கு வீதி விளக்குகள்கூட இல்லாத நிலை? இவற்றை ஏன் சம்மந்தப்பட்டவர்கள் கண்டும் காணாததுபோல் இருக்கின்றார்கள் என்பதை நினைத்துப் பார்கும்போது எமது உள்ளம் நெகிழ்கின்றது என விவசாயப் பெருமக்கள் ஏங்குகின்றனர்.

விலைவாசி வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ள நட்டத்தை ஈடு செய்ய முடியாத நிலையிலும், தோட்டங்களுக்கு பலவித பீடைத்தாக்கங்களும், விட்டபாடில்லை, பங்கஸ், இலைச்சுருள், இலை மஞ்சலாகுதல், குருமண்நோய், வேர்முடிச்சி, வாடல் நோய் உள்ளிட்ட பல நோய்வகைகள் தாக்குவதனாலும், மிளகாய்ச் செய்கையாளர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு வரட்சி மற்றும் வெள்ள அனர்த்த அழிவு நிவாரணங்கள் காலத்திற்குக் காலம் வழங்கப்படும் நிலையில் மிளகாய் உள்ளிட்ட மேட்டுநில பயிர்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்புக்களை ஈடுசெய்ய யாரும் முன்வராத நிலையே காணப்படுவதாகவும் அப்பகுதிவாழ் விவசாயிகள் பெருமூச்சு விடுகின்றனர்.

களுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார வர்த்தக நிலையம் இதுவரையில் திறக்கப்பட வில்லை. அதனைத் திறந்து அப்பகுதி விவசாயிகளுகளின் உற்பத்திகளை விற்பனை செய்ய இலகு வழி கிடைக்கப்பெறுமா என்ற ஏக்கமும் விவசாயிகளிடத்தில் காணப்படுகின்றது.

தாம் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு தாமே அதற்குரிய நிருணய விலையைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அதனை தற்போது யார் தீர்மானிக்கின்றார்கள் என்றால் எம்மிடம் கொருட்களைக் கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகள்தான் தீர்மானிக்கின்றார்கள்.

இது எமது பிள்ளைக்கு இன்னொருவர் பெயர் வைப்பது போன்று உள்ளது. இந்த நிலை மாற்றமடைந்து எமது உற்பத்திகள் அனைத்திற்கும் நாங்களே மொத்த விலையை தீர்மானிக்கின்ற யுக்தி உருவாக்கப்பட வேண்டும்.இது இவ்வாறு இருக்க தற்போது பட்டிருப்புத் தொகுதியைப் பிரத்திநிதித்துவப் படுத்தும் படுவான்கரையிலும், எழுவான்கரையிலும், இவ்வாறு மேட்டுநிலப் பயிற் செய்கைகள் விஸ்த்தரிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

எனவே இத் தொகுதிமைய மையப்படுத்தும் ஒரு பலமான மரக்கறி உற்பத்தியாளர் சங்கம், ஒன்றை நிறுவி அதனூடாக விவசாயிகளின் இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது சாலப் பொருத்தமாக அமையும் எனவும், இப்பிரதேசத்திலுள்ள பொருளாதாரத்தில் அக்கறை கொள்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறு அமைந்தாலும் வருமானத்தை ஈடிக்கொடுக்கும் துறைகளில் ஒன்றாக மரக்கறி உற்பத்திகளும் ஒன்றாக அமைவதனால் அதனை மேற்கொள்ளும் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்வரை யாரும் பார்த்திருக்க முடியாது.

எனவே இதற்குரிய பொறிமுறையை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்பதையே அனைவரும் எதிர்பார்க்கின்னறனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.