Header Ads

Header ADS

Tuesday, 8 May 2018

மோடி எடப்பாடிக்கு பாரதிராஜா சாபம்.!

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,

மக்களால் மக்களுக்காகவே மக்களே தேர்ந்தெடுத்து நடத்தும் ஆட்சியே மக்களாட்சி. இன்று, தமிழ்நாட்டில் இதற்கு எதிராய் நடந்து கொண்டிருக்கிறதோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது. மக்களை சிறந்த குடிமக்களாய் உருவாக்குவதை விட்டுவிட்டு, போராட்டக்காரர்களாய் மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

அடிப்படை உரிமைகளுக்கும், அன்றாட வாழ்க்கைக்கும் அனுதினமும் அச்சுறுத்தல். மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்பட்டு, தமிழர்களின் குரல்வளையை நெறிப்பது எந்த வகையில் நியாயம்? காவிரி நீர் பிரச்சினை முதல் மீத்தேன் வரை எத்தனையோ மனித வாழ்க்கைக்கு எதிரான ஒப்பந்தங்களுக்கு சம்மதம் தெரிவித்து, பிரச்சினைகளையே பிரபலப்படுத்தி ஆட்சி நடத்துகிறீர்கள்.

பொறியியல் என்ற படிப்பை பெட்டிக்கடை போலத் திறந்துவிட்டு, மருத்துவக் கல்விக்கு மட்டும் ‘அனஸ்தீசியா’ (மயக்க மருந்து) கொடுத்திருக்கிறீர்கள். தாய்மொழியில் படித்த மாணவர்களுக்கு, ‘நீட்’ என்று வேற்று மொழியில் நுழைவுத்தேர்வு. காட்டுமிராண்டித்தனமான கட்டுப்பாட்டு விதிமுறைகள், மாணவிகளை மானபங்கப்படுத்தும் பரிசோதனைகள்.

உள்ளூரில் எழுதிய நுழைவுத்தேர்வு, இன்று வெளிமாநிலங்களில் எழுதும் அவல நிலை ஏன்? 25 தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டது நம் தமிழ்நாடு. ஏன் இங்கு தேர்வு மையம் அமைக்க இடமில்லையா? ஏழை, எளிய மாணவர்களில் வெளிமாநிலங்களில் செலவுசெய்து தேர்வு எழுத முடியுமா?

மாணவர்கள் கண்ட மருத்துவக் கனவுகளுக்கு ஆரம்பத்திலேயே சாவு மணி அடிக்கிறீர்கள். கேரளாவில் மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதச் சென்ற மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தகப்பனார் கிருஷ்ணசாமி, மன உளைச்சலால் மரணமடைந்து விட்டார். ஐயோ, இதுதான் மக்களாட்சியில் மக்களுக்குச் செய்யும் கைமாறா?

பாவம்… இந்தப் பரிதாபங்கள் எல்லாம் ஆட்சியாளர்களான உங்களைச் சும்மா விடாது. அண்டை மாநிலமான பினராய் விஜயனின் கேரள அரசு, தமிழக மாணவர்களுக்குப் பயண உதவியும் பாதுகாப்பும் செய்து கொடுத்திருக்கிறது. எங்களை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களே.

நீங்கள் எங்களுக்கு செய்ய மறந்தது ஏன்? இனிமேல் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? மருத்துவம் படிக்க ஆசைப்பட்டவனுக்கு மரணம்… உரிமைக்காகப் போராடுபவனுக்கு சிறை… இதுதான் மக்களாட்சியின் தத்துவமா? வேண்டாம் தமிழக அரசே!

இளைஞர்களின் கனவுகளையும், எதிர்கால வாழ்க்கையையும் சிதைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசுடன் நீங்கள் இணக்கமான உறவு வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்துவது மிகவும் வேதனைக்குரியது.

நீங்கள் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தானே.
அந்த வலியை நீங்கள் உணரவில்லையா? தன் மகனின் கல்வி லட்சியத்திற்காக அண்டை மாநிலத்தில் உயிர் துறந்த கிருஷ்ணசாமியின் உடலை, பிரேத பரிசோதனை கூட செய்யாமல் பாதுகாப்பாக அனுப்பிய கேரள முதல்வர் பினராய் விஜயனை வாழ்த்துவோம். மத்திய அரசு நம்மை விட்டுவிட்டாலும், பொதுச்சேவை செய்ய எங்கள் மண்ணில் நிறைய போராளிகள் இருக்கிறார்கள்

இவ்வாறு தெரிவித்துள்ளார் பாரதிராஜா.
Theme images by Jason Morrow. Powered by Blogger.