செயல் இழந்த உளவுத் துறை; புயலடித்த தூத்துக்குடி!

கலவரத்தின் பின்னணி

எம்.பி.காசி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நூறாவது நாள் போராட்டத்தை மக்கள் எழுச்சியோடு நடத்த வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் திட்டம். ஆனால், இந்தத் திட்டத்தை மோப்பம் பிடிக்காமல் முழுமையாகக் கோட்டைவிட்டது உளவுத் துறை.
திமுக ஆட்சியின் உளவு வேலைகள்!
பொதுவாக மாநிலத்தில் பெரும் கலவரம் உருவாவதை முன்கூட்டியே தடுத்து நிறுத்தி காப்பாற்றுவது மாநில உளவுப் பிரிவு அதிகாரிகளின் முக்கியமான வேலை. கிறிஸ்துவர்கள் போராட்டம் என்றால் உடனே சென்னையில் உள்ள பிஷப்களை அழைத்துப் பேசி சுமுகமாகப் பேசி முடிக்க முயற்சிப்பார்கள். அவர்களிடம் சற்குண பாண்டியன் போன்றவர்களை விட்டுப் பேசுவார்கள். முடியவில்லை என்றால் ஒரு கட்டத்தில் கருணாநிதியே பாதிரியார்களிடம் போன் போட்டு பேசி சமாதானம் செய்வார்.
மீனவர்கள் உறுதியானவர்கள். போராட்டத்தில் அடித்தாலோ, சுட்டாலோ கலைய மாட்டார்கள். அவர்களை முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர் அவர்கள் மூலமாகப் பேசி அமைதிப்படுத்தச் செய்வார்கள். ஆளும் கட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களை உளவுத் துறை கண்காணித்து சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் பேசி போராட்டக்காரர்களுக்கு போலீஸ் ஒத்துழைப்புக் கொடுத்து டைமிங்கில் முடிப்பார்கள்.
குறிப்பாக மதிமுக தலைவர் வைகோவைச் சமாதானப்படுத்த வேண்டும் என்றால் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தியின் உறவுக்காரார் மதிமுக கணேசமூர்த்தி மூலமாகப் பேசுவார். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்கும்போது அவர்களிடம், ‘உயர் அதிகாரிகள் பேசி சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் இல்லாமல் பார்த்துக்குங்க. இந்த இடத்திலிருந்து இந்த இடம் வரையில் ஊர்வலமாக வந்து குறிப்பிட்ட இடத்தில் கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்யுங்கள். போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும். பிறகு கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்து அனுப்புகிறோம்’ என்று உளவுத் துறை அதிகாரிகள் பேசுவார்கள். அவர்களும் ஒத்துழைப்பார்கள். இதுபோலத்தான் உளவுத் துறை அதிகாரிகள் பெரும் பிரச்சினைகளைச் சுமுகமாக முடிப்பார்கள். ஆனால், மேற்சொன்ன எந்த வழிமுறையும் அதிமுக அரசில் அதுவும் ஜெயலலிதாவுக்குப் பிறகான ஆட்சிக் காலங்களில் நடைபெறவே இல்லை.
மக்களைப் பற்றிப் போட்ட தப்புக் கணக்கு!
பொதுவாக போலீஸார்தான் போராட்டக்காரர்களைத் திசை திருப்பி விடுவார்கள். ஆனால், தூத்துக்குடி கலவரத்தில் போலீஸாரை திசை திருப்பி விட்டார்கள் போராட்டக்காரர்கள். இதுதான் உளவுத் துறையின் ஃபெயிலியர்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நூறாவது நாள் போராட்டம் என்பது முன்பே மாநில உளவுத் துறைக்குத் தெரியும். மத்திய உளவுத் துறைக்குத் தகவல் தெரிந்தும் மாநில அரசுக்கு அலார்ட் செய்யாதது ஏன் என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது.
‘உங்கள் மாவட்டத்தில் எந்தக் கட்சி, எந்த அமைப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு நூறாவது நாள் போராட்டத்தில் பங்கெடுக்க இருக்கிறது’என்று மாவட்டந்தோறும் உளவுத் துறை அலுவலகத்தில் ரிப்போர்ட் கேட்டார்கள். கீழ்மட்ட அதிகாரிகளும், ‘ஸ்டெர்லைட் போராட்டத்தில் சீமான், வைகோ, வேல்முருகன், திருமுருகன் காந்தி, கெளதமன் என யாரும் கலந்துகொள்ளவில்லை’ என்று ரிப்போர்ட் கொடுத்தார்கள். முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்ளாததால் பெரிய அளவில் போராட்டம் இருக்காது என்று அலட்சியம் காட்டிவிட்டது உளவுத் துறை மேலிடம். தூத்துக்குடி எஸ்பி சிஐடி அதிகாரியும் அதிகபட்சமாக 1,500 பேர்தான் கலந்துகொள்வார்கள் என்று ரிப்போர்ட் கொடுத்தார். ஆனால் மேற்குறிப்பிட்ட எந்தத் தலைவரும் இல்லாமல் மக்கள் சக்தியே பல்லாயிரக்கணக்கில் திரண்டதில் அதிர்ச்சியாகிவிட்டது உளவுத் துறை.
செல்போன் ஒட்டுக் கேட்பு!
உளவுத் துறையினர் முக்கியமான கட்சித் தலைவர்கள், இயக்கத்தின் தலைவர்கள், தொண்டு நிறுவனர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்பது வழக்கம். அப்படிதான் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர்கள் போனும் ஒட்டு கேட்கப்பட்டது. இதை அறிந்த அவர்கள் செல்போன் உரையாடல்களை ஆலோசிப்பதை நிறுத்திவிட்டு நேரடி சந்திப்பின் மூலமே கலந்து பேசியுள்ளார்கள். இதுவும் போராட்டத்தின் முக்கியமான வெற்றி.
மேடையில் எமோஷனாக பேசக்கூடிய தலைவர் ஒருவரிடம் தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட் போராட்டம் சம்பந்தமாக ஒருவர் பேசும்போது எதிர்முனையில், “சட்டத்திற்கு எதிராகச் செயல்படக் கூடாது. போராட்டத்துக்குத் தலைமை இல்லாமலிருக்கிறது. அதில் நான் கலந்துகொள்ள முடியாது” என்று பேசிட்டு லைனைத் துண்டித்தார். இந்த உரையாடலை உளவுத் துறையும் நம்பி மோசம் போனது.
போராட்டக்காரர்களின் பலமுனை பயணம்!
தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன் 21ஆம் தேதி அதிகாரிகள் மீட்டிங் போட்டு போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாத அளவுக்கு, இருக்கும் போலீஸை வைத்துத் தடுக்க திட்டமிட்டிருந்தார். அப்போது போலீஸார் கைகளில் ‘லட்டி’ கூட இல்லை. அது மேலிடத்து உத்தரவு.
22ஆம் தேதி 18 மீனவக் கிராமங்களிலிருந்து ஆண், பெண், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தவர்கள் 17 மையங்களிலிருந்து பிரிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வெவ்வேறு வழியில் சென்றார்கள். பனிமய மாதா தேவாலய ஃபாதர் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஒரு பெரும்படை புறப்பட்டு வந்தது. நாம் தமிழர், மே 17 அமைப்பினர் மற்றும் பல புரட்சிகர அமைப்பினர் என ஏராளமானோர் கைகோத்துக் கொண்டார்கள்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வருபவர்களை வெறும் 750 போலீஸை வைத்து மறித்துத் தடுத்து விடலாம் என்று நினைப்பது கரைபுரண்டு ஓடும் ஆற்றில் அணைக்கட்டுவது போலதான் இருந்தது.
ஃபயரிங் நேரம்!
டிஐஜி கபில்குமார் சரத்கர் இந்திகாரர். மிக நிதான சுபாவம் கொண்டவர். சம்பவத்தன்று வெளியில் அதிகமாகத் தலைகாட்டாமல் ஏசி காரிலும் அறையிலும் மைக் கையுமாக இருந்தார். ஐஜி சைலேஷ்குமார் கலவர நேரங்களில் மதுரையை விட்டு வெளியில் வரவில்லை.
மாவட்டங்களில் பரவலாக மரக்கட்டைகள் போட்டுச் சாலையை துண்டித்து விட்டார்கள். ஐந்தாயிரம் போலீஸார் இருந்திருந்தால்கூட கூட்டத்தைக் கலைத்திருக்க முடியாது என்கிறார்கள் சம்பவ இடத்திலிருந்த போலீஸார்.
போராட்டக்காரர்கள் கூட்டத்தைப் பார்த்துத்தான் மேல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, பக்கத்து மாவட்ட போலீஸாரை வரவழைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர், கார்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிவதைக் கண்ட வருவாய்த் துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகளிடம் ஃபயரிங் செய்யுங்கள் என்றபோதுதான் எஸ்எல்ஆர் துப்பாக்கிகளை எடுத்து குருவிகளை சுடுவதுபோல் சுட்டுத் தள்ளியுள்ளார்கள்.
காவல் துறையின் வாதம்!
மாவட்டக் காவல்துறை அதிகாரி ஒருவரை பிசியான நேரத்திலும் தொடர்புகொண்டோம். “முன்கூட்டியே போலீஸ் பலத்தை அதிகரித்திருந்தால் அல்லது ரப்பர் குண்டுபோட்டு அடித்திருந்தால் இத்தனை உயிர்கள் போயிருக்காதே?’’ என்று கேட்டோம்.
அதற்கு அவர், “மேலிடத்துக்குத் தகவல் கொடுத்தவர்கள் 1,500 பேர்தான் சேருவார்கள் என்று சொல்லியுள்ளார்கள். அதனால் பக்கத்து மாவட்டத்து போலீஸாரைக் கூட அழைக்கவில்லை. போராட்டத்துக்கு டூட்டிக்குப் போகும் போலீஸார் துப்பாக்கி, தோட்டாக்கள் எடுத்து போகக்கூடாது என்று உத்தரவு. அதனால், லட்டியும் அடியைத் தடுக்க பிரம்பால் செய்யப்பட்ட தடுப்பும் எடுத்துப் போனோம்.
நிலைமை மோசமாகப் போனதால் ஏஆர் போலீஸ் மற்றும் ஏஆர் அதிரடிப் படையை வெப்பனோடு வரச் சொன்னோம் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி அடித்தார்கள். அதன் பிறகுதான் ஏஆர் போலீஸாரை சிவில் உடையில் வரச்சொல்லி ஃபயரிங் செய்தோம். இது யார் குற்றம் என்று தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்பில் உள்ளே புகுந்து 30 டூவீலர்கள், 20 கார்கள் எரிக்கப்பட்டன. சுமார் 70 போலீஸார் அடிபட்டுப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இரண்டு போலீஸார் சீரியஸாக இருக்கிறார்கள்” என்றார் கோபமான குரலில் அந்த அதிகாரி. ஆக மொத்தம், தெளிவான வழிகாட்டுதலும் மேல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இல்லாமல் போனதும்தான் இவ்வளவு உயிரிழப்புக்குக் காரணம் என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.
செயல் இழந்த உளவுத் துறை!
லோக்கல் போலீஸார் ஒரு பிரிவாக சென்றார்கள், ஏஆர் போலீஸார் ஒரு பிரிவாக சென்றார்கள், சிவில் போலீஸ் டீம் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து அவர்கள் மூவ்மென்ட்களைக் கண்காணித்தார்கள். ஏஆர் அதிரடிப் படை ஒன்று உள்ளே நுழைந்தது அவர்கள்தான் கண்ணை மூடிக்கொண்டு குருவிகளைச் சுட்டுப் பொசுக்குவதுபோல் செய்தார்கள்.
துப்பாக்கிச் சூட்டுக்கும், மக்கள் உயிர் இழப்புக்கும் காரணம் முதல்வர் முழுமையாக நம்பியுள்ள உளவுத் துறையின் செயலிழப்புதான் என்பது காவல் துறையே ஒப்புக்கொள்ளும் உண்மை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.