தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை நிராகரித்த சி.வி?

வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு இணங்கிய போதிலும், அவர் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும் எண்ணம் தனக்கு கிடையாது என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் பதவி காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், சி.வி. விக்னேஸ்வரனுக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் வெளியிட்டுள்ளது.
எனினும், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வடமாகாண மக்களுக்கு பணியாற்றவே தாம் விரும்புவதாக சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து தற்போது வடக்கு அரசியலில் சர்ச்சைகள் வெடித்துள்ளன.
அடுத்து முதலமைச்சர் வேட்பாளராக சி.வி. விக்னேஸ்வரனை நிறுத்த போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அண்மையில் அறிவித்திருந்தார்.
அதேபோல் முதலமைச்சர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் தெரிவித்திருந்தார். தற்போது கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், “வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னை முன்னிலைப்படுத்தினால் அது குறித்து நல்ல முடிவெடுப்பேன்.
கடந்த முறை விட்ட தவறை இந்தத் தடவையும் விடமாட்டேன்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக வடக்கு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பு ஊடம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.