மண்டைதீவில் படையினரால் படுகொலையை நினைவுகூர்ந்து நினைவேந்தல்!

மண்டைதீவில் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐம்பது பேர் புதைக்கப்பட்டு மூடப்பட்ட கிணற்றடியில் நேற்று (18) தமிழினப் படுகொலை நினைவேந்தல் இடம்பெற்றது. 

கடந்த 1990 ஆம் ஆண்டு தீவகத்தை வல்வளைப்பு செய்த சிறிலங்கா படையினர் மண்டைதீவுக்குள் புகந்து அங்கு கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமது கண்ணில் பட்ட பொதுமக்களைச் படுகொலை செய்தனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என எந்த வேறுபாடும் இன்றி பொதுமக்களைப் படுகொலை செய்தது சிங்கள இராணும். இவ்வாறு ஐம்பது பேர் வரையானோர் படுகொலை செய்யப்பட்டனர். 

படையினரின் தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளைக்கூட செய்ய முடியாத பொதுமக்கள் சடலங்கள் அனைத்தையும் ஒரு கிணற்றில் போட்டு மூடிவிட்டு தமது ஊரை விட்டு வெளியேறினர். 

தற்போது மக்கள் அங்கு மீளக்குடியேறியுள்ள நிலையில், நேற்று அங்கு தமிழினப் படுகொலை நினைவேந்தல் இடம்பெற்றது. 

மேற்படி மக்கள் புதைக்கப்பட்ட கிணற்றடியில் ஒன்றுகூடிய மண்டைதீவு மக்கள் தமது உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தினர். சிங்களப் படையினரின் கொடுமைகளை நினைத்து அவர்கள் கண்ணீர் சிந்தினர். 

அவர்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி அந்தச் சுடர்களின் மத்தியில் நின்று வணக்கம் செலுத்தினர்.

இந்த நினைவேந்தலில் மதகுருக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.