தவறாக நடந்து கொண்ட புகைரத திணைக்கள ஊழியர் பிணையில் விடுதலை!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்தில் குடும்பப் பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரயில்வே உத்தியோகத்தரை பிணையில் விடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்த தொடருந்தில் பிரிட்டன் வாழ் தமிழ் குடும்ப பெண்ணொருவர் வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார்.

இதன் போது அந்தத் தொடருந்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட ரயில்வே சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர், அந்தப் பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்தார்.

இதனை அவதானித்த அங்கு நின்றவர்கள் அந்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள்? என கேட்ட போது, அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்தார். மேலும் தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் போன்று தகாத வார்த்தைகளை அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்.


இதன் போது அங்கு சென்ற ஊடகவியாலாளர் ஒருவரையும் அவர் தாக்க முயற்சித்தார். இந்த சம்பவம் சாவகச்சேரி ரயில் நிலையத்தை அண்மித்த போது நடந்து கொண்டிருந்தது.

“நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பொலிஸாராலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான்தான் பெரியவன் என்று மிரட்டும் தொனியில் அந்த ஊழியர் அனைவரையும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் தொடருந்து யாழ்.பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும், அந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்.ரயில் நிலைய அதிபருக்கு அந்தப் பெண்ணால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்துக்கான ஆதாரமாக காணொலியும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ரயில்வே ஊழியரைக் கைது செய்த யாழ்.பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று (9) பிற்பகல் முற்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரை பிணையில் விடுவிக்க பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அதனால் அவரை நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.