திருச்சியைப் புரட்டிப் போட்ட கனமழை!

திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று மாலை ஒன்றரை மணி நேரம் கனமழை பெய்தது. இதனால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, மக்கள் அவதிக்குள்ளாகினர். அதே நேரத்தில் இம்மழையால் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவியது.இதே போல் திண்டுக்கல், விருதுநகர், நாகை, பெரம்பலூர் மாவட்டங்களிலும் பெய்த கனமழையால் பொது மக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் சில நாட்களுக்கு முன் புயல் வீசியதுடன், கன மழையும் பெய்தது. இதில் பலத்த உயிர்ச்சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டன. இந்நிலையில், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் புழுதிப் புயல் வீசியது. 
தலைநகர் தில்லியிலும் புழுதிப் புயல் வீசியது. பின்னர் பரவலாக மழை பெய்தது.  ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. மின்விநியோகமும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.  திருச்சி மாவட்டம் லால்குடி, சமயபுரம், டால்மியாபுரம், லால்குடி, மணச்சநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, ரஞ்சிதபுரம் என்ற இடத்தில் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகினர். ஒன்றரை மணி நேரத்தில், திருச்சியில் 7.5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், நத்தம், கோபால்பட்டி, சின்னாளபட்டி, வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.


பெரம்பலூர் மாவட்டம் துரைமங்கலம், குன்னம், வேப்பூர், அகரம், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை, அம்மாபாளையம், செட்டிகுளம், பாடாலூர், கொளக்காநத்தம் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மழையை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மதுரையில் பல இடங்களில் மாலை 7 மணியளவில் மழை கொட்டித் தீர்த்தது. மேலூர், ஒத்தக்கடை போன்ற இடங்களிலும் கன மழை பெய்ததால் விவசாயிகள் மகழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போன்று விருதுநர் மாவட்டம், விருதுநகர், குல்லூர்சந்தை, வடமலைக்குறிச்சி, போவிலாங்குளம் போன்ற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.