Header Ads

Header ADS

Friday, 4 May 2018

சர்வதேச வியூகங்களே தமிழீழம் எதிர்கொள்ள வேண்டிய சவால்!


(மீள்பதிவு)
ஜோர்ஜியாவிற்கும் தமிழீழத்திற்கும் என்ன தொடர்பு? ஸ்டாலின் ஜோர்ஜிய நாட்டவர் என்பதும் அவருடைய பெயரை மட்டக்களப்பிலுள்ள எனது பத்திரிகை நண்பர் தனது மகனுக்கு வைத்திருக்கின்றார் என்பதைத்தவிர என்ன தொடர்பென யாராவது கேட்கலாம். ஜோர்ஜியாவின் பிராந்திய ஒருமைப்பாடு எவ்வகையிலும் பேணப்படவேண்டுமெனவும் அந்நாட்டிலிருந்து பிரிந்து செல்ல முனையும் தெற்கு ஒசற்றியா மற்றும் அஜாரியா ஆகிய பிராந்தியங்கள் தமது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை கைவிட வேண்டுமெனவும் அமெரிக்கா வற்புறுத்தி வருகின்றது.ஜோர்ஜியாவிலும் இலங்கையிலும் தமது உரிமையை நிலைநாட்ட முனையும் இனங்களுடைய சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கும் பல்வேறு வழிவகைகள் மூலம் தடுப்பதற்கும் அமெரிக்கா கொண்டிருக்கும் காரணம் ஒன்றே
கஸ்பியன் கடலிலுள்ள பெரும் எண்ணெய் வளத்தை கையகப்படுத்தி அங்கிருந்து நெடுந்து}ரக் குழாய்களின் ஊடாக அந்த எண்ணெயை தனது நேச நாடான துருக்கிக்கும் மத்திய தரைக் கடலிலுள்ள தனக்கேதுவான துறைமுகங்களுக்கும் கொண்டு செல்வதற்கு இன்றியமையாத வகையில் ஜோர்ஜியா அமெரிக்காவிற்குத் தேவைப்படுகின்றது.


பயன்படுத்தப்படாமலிருக்கும் மத்திய ஆசியாவின் பெரும் எண்ணெய் நிலவாயு வளங்களை வெளிக்கொணர்வதற்கு இன்றியமையாத இடைநிலை வழியாக (Oil transit route)ஆப்கானிஸ்தானை அமெரிக்கா கருதியது. ஆப்கானிஸ்தானில் இவ்வாறான ஒரு எண்ணெய் பெரும் குழாயை அமைப்பதற்கு முயன்று கொண்டீருந்த உனோகால் (Unocal) என்ற அமெரிக்கக் கம்பனியின் ஆப்கான் பிரதிநிதியாக இருந்தவரான கமீட் கார்சாய் என்பவரை அந்நாட்டின் மீது படையெடுத்து அங்கிருந்த தலிபான் அரசை முறியடித்த பின்னர் அமெரிக்கா பொம்மை ஜனாதிபதியாக நியமித்த விடயம் நீங்கள் ஏற்கனவே அறிந்ததே.


மத்திய ஆசியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் ஊடாக அமெரிக்கா நிறுவ முற்படும் எண்ணெய்ப் பெருங்குழாய் பாகிஸ்தான் ஊடாகச் சென்று இந்திய உபகண்டத்திற்கு மேற்காகவும் பாரசீக வளைகுடா ஆபிரிக்காவின் வடகிழக்கு முனை ஆகியவற்றின் கிழக்காகவும் அமைந்துள்ள அரபிக்கடலைச் சென்றடைந்து அங்கிருந்து அது அமெரிக்காவிற்கும் அதன் கூட்டு நாடான ஜப்பானுக்கும் பாதுகாப்பாக எந்தவொரு சூழ்நிலையிலும் கொண்டு செல்லப்படுவதாயின் இலங்கை அரசியல் தளம்பல் பிரிவினைச் சிக்கல் என்பன இல்லாத ஒரு நாடாக இருக்க வேண்டுமென்பது அமெரிக்காவின் அவா. அது மட்டுமின்றி உலகின் வரையறுக்கப்பட்ட வளங்களை கையகப்படுத்தவும் அவற்றைத் தமது பொருளாதாரங்களைப் பேணுவதற்கும் துரிதமாக நவீன மயப்படுத்தி வளர்ப்பதற்காக தத்தமது பிராந்தியங்களுக்கு அவ்வளங்களைத் தடையின்றிக் கொண்டு செல்வதற்கும் தனக்குப் போட்டி ஐரோப்பிய யூனியன், சீனா, இந்தியா ரஷ்யா ஆகிய நான்கும் செயற்பட்டு வருகின்றன. செயற்படப்போகின்றன என அமெரிக்கா கடந்த பல ஆண்டுகளாக மிக கவனம் கொள்கின்றது.மேற்படி நாடுகளின் முயற்சிகளை பலவீனப்படுத்தவும் மறைமுகமாக முறியடிக்கவும் அமெரிக்கா பயங்கரவாதம் என்ற பம்மாத்தை நன்றாகவே பயன்படுத்தி வருகின்றது. ஒசாமா பின்லேடன் தலை தூக்குவதற்கு முன்னதாகவே அமெரிக்காவின் சக்திவள அமைச்சு மத்திய ஆசியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் ஊடாக எண்ணெய் குழாய் அமைக்கப்பட்டாகவேண்டும் என அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இதற்குத் தலிபான் மறுத்ததும் அமெரிக்காவின் நேச சக்தியாக இருந்த அவ்வரசு பயங்கரவாத அரசாக பிரகடனப்படுத்தப்பட்டதும் பயங்கரவாத ஒழிப்புப் போர் என்ற போர்வையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்து அங்கு நிலை கொண்டிருப்பதும் நாமறிந்ததே.


இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் தனக்குப் போட்டியாக மத்திய ஆசியாவின் எண்ணெய் வளங்களைக் கையகப்படுத்துவதையும் வெளிக்கொணர்வதையும் தடுப்பதற்கு அமெரிக்கா வகுத்துவரம் வியூகத்திற்கு பிரிவினை நெருக்கடியற்ற தனக்குச் சார்பான வலுவான மத்திய அரசொன்று ஸ்ரீலங்காவில் அதற்கு இன்றியமையாது தேவைப்படுகிறது. இந்த வியூகத்தின் தன்மைகளை ஓரளவு புரிந்து கொள்வதற்கு ஜோர்ஜியாவில் தற்போது அமெரிக்கா அரங்கேற்றி வரும் நாடகம் எமக்கு உதவும்.
சோவியத் குடியரசு உடைந்து ஜோர்ஜியா 1990 இல் தனிநாடாகியபோது அந்நாட்டுக்கு பெரும் பொருளாதார உதவியை அமெரிக்கா வழங்கியது.


 அத்துடன் உலகில் ஜோர்ஜியாவிற்கும் இலங்கைக்குமே மிகக்கூடுதலான சராசரி உதவித் தொகையை கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா வழங்கியுள்ளது. இது மட்டுமின்றி படிப்படியாக ஜோர்ஜிய இராணுவத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான பயிற்சி என்ற போர்வையில் மிக இறுக்கமான உறவுகளையும் அமெரிக்கா வளர்த்து வந்துள்ளது. இது மட்டுமின்றி மிக்காயில் சாக்கஸ்விலி என்ற அமெரிக்காவில் பயின்ற ஒரு சட்டத்தரணியைத் தனக்குச் சார்பான ஒரு தேசிய அரசியல்வாதியாக பெரும் பணத்தைச் செலவிட்டு உருவாக்கியது.


கடந்த மாதம் அமெரிக்காவினால் பயிற்றுவிக்கப்பட்ட வெகுஜன ஆர்ப்பாட்டக்காரர்களின் உதவியோடும் மேலைத்தேய ஊடகங்களின் சார்பு நிலை அறிக்கைகளின் பின்னணியோடும் சாக்கஸ்விலி ஒரு அமைதியான கிளர்ச்சியை நடத்தி ஜோர்ஜிய ஜனாதிபதி எட்வேர்ட் செவர் நாட்சேயின் ஆட்சியைக் கவிழ்த்தார்.


ஆரம்பத்தில் அமெரிக்காவையும், பிரித்தானியாவையும் ஆதரித்ததன் மூலமும் செச்சென்னியா பிரிவினவாதிகளுக்கு மறைமுக உதவியும் ஊக்கமும் வழங்க அந்நாடுகளை அனுமதித்ததன் மூலமும் செவர்நாட்சே ரஷ்யாவைப் பகைத்துக் கொண்டார். செச்சென்னியப் பிரிவினைவாதிகள் ஜோர்ஜியாவிலே பின்தளம் அமைத்துச் செயற்படுகின்றனர் எனவும் அவர்களுக்கு அமெரிக்காவும், பிரித்தானியாவும் மறைமுக ஆதரவும் போர்த் தளபாடங்களும் வழங்குகின்றன என்பதும் ரஷ்யாவின் குற்றச்சாட்டு. இந்த வகையில் ரஷ்யாவின் மீது அழுத்தம் செலுத்துவதற்கு தனக்கு ஏற்றதொரு நாடாக அமெரிக்கா ஜோர்ஜியாவைக் கருதி வருகின்றது.


கடந்த மாதம் 5 ஆம் திகதி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் டொனல்ட் ரம்ஸ்பெல்ட் ஜோர்ஜியா சென்று அதன் புதிய தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். அமெரிகக் சிறப்புப் படைகள் ஜோர்ஜிய இராணுவத்திற்கு வழங்கி வரும் பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சித் திட்டம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகின்றது. இதை தொடர்ந்து நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளையும் ரம்ஸ்பெல்ட் ஜோர்ஜியாவின் புதிய அமெரிக்கச் சார்பு தலைவர்களுடன் நடத்தியுள்ளார். இத்துடன் ஜோர்ஜிய இராணுவத்தை தமது ஆலோசனைகளின்படி முற்றாக மறுசீரமைப்பதற்கும் அமெரிக்கா முயன்று வருகின்றது. அமெரிக்காவினால் பயிற்றுவிக்கப்பட்ட படையினரே புதிய ஜோர்ஜிய இராணுவத்தின் அடித்தளமாகவும் வழிநடத்துபவர்களாகவும் அமைவர் என வொஷிங்டன் எதிர்பார்க்கின்றது.கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தனது அண்டை நாடான ஜோர்ஜியா இவ்வாறு அமெரிக்காவின் கைக்குள் செல்வதைப் பல்வேறு வழிகளிலும் ரஷ்யா தடுக்க முற்பட்டு வருகின்றது. ஜோர்ஜியாவை தனது முழுமையான பிடிக்குள் கொண்டுவருவதற்கு தடையாக அந்நாட்டின் சுயநிர்ணய உரிமை கோரும் பிராந்தியங்கள் உள்ளன என்பதையும் இவற்றிற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஜோர்ஜியாவில் பதவிக்கு வரும் எந்த அரசின் மீதும் ரஷ்யாவினால் தனக்குப் பாதகமான அழுத்தங்களை ஏற்படுத்த முடியும் என்பதை அமெரிக்கா உணர்கின்றது.இதன் காரணமாகவே ஜோர்ஜியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை இறுக்கமாகப் பேணக்கூடிய ஒரு கைப்பொம்மை அரசை சாக்கஸ்விலியின் கீழ் உருவாக்க அமெரிக்கா தற்போது முனைந்து வருகின்றது. ஜோர்ஜியாவின் மத்திய அரசை ரஷ்யாவின் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்காததொன்றாக வலுப்படுத்தும் நோக்கில் சுயநிர்ணய உரிமை கோரும் அந்நாட்டின் பிராந்தியங்களை உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமது பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுமாறும் அப்படி அவை செய்வதற்குப் பிரதியீடாக பொருளாதார உதவி பெருமளவில் வழங்கலாமெனவும் அமெரிக்கா கூறி வருகின்றது.மேற்கூறியவற்றிலிருந்து ஜோர்ஜியாவையும் இலங்கையையும் அமெரிக்கா தனது கேந்திர பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் கையாள்வதில் உள்ள பொதுமைகளை நாம் தெளிவாக இனங்கண்டு கொள்ள வேண்டும். இலங்கையில் அமெரிக்கா உருவாக்கி வரும் சாக்கஸ்விலி யாரென்பது வெள்ளிடைமலை.


ஜோர்ஜியாவில் கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி செவர்நாட்சேயும் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப்போல அமெரிக்கா ஆதரவாளராக இருந்தபொழுதும் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றோடு பிணைப்புகளை ஏற்படுத்தியதன் மூலம் அமெரிக்காவின் ஒரு முழுமையான கைப்பொம்மையாக மாறாமல் செயற்பட்டதே அவருடைய வீழ்ச்சிக்குக் காரணமெனலாம். ஜோர்ஜியாவிற்கு ரஷ்யா போல் இலங்கைக்கு இந்தியா அமைந்துள்ளது. தமிழ் பேசும் மக்களுடைய சுயநிர்ணய உரிமைப் போராட்டமே ஸ்ரீலங்கா பகுக்கப்படாத இறைமையோடு அமெரிக்காவின் பிடிக்குள் செல்வதற்கு தடையாகவுள்ளது.தமிழர் போராட்டத்தின் அழுத்தம் இல்லாவிடின் அமெரிக்காவின் கைக்குள் ஸ்ரீலங்கா செல்வதை தடுப்பது கடினம் என்பதை இந்தியா நன்றாக உணர்ந்துள்ளது. எங்ஙனம் தெற்கு ஒசற்றியா, அப்காசியா ஆகியவற்றின் சுயநிர்ணய உரிமைப்போராட்டங்கள் ஜோர்ஜியா அமெரிக்காவின் கைக்குள் போவதைத் தடுப்பதற்கான அழுத்தக் கருவியாக உள்ளனவோ, அதேபோல் எமது போராட்டமும் இந்தியாவிற்கு ஒரு அழுத்தக்கருவியாக 1983 இலிருந்து இருந்து வருகின்றது. இதில் ஒரேயொரு வித்தியாசமென்னவெனில் ரஷ்யாவிற்கு தெற்கோடு நேரடித் தொடர்புள்ளது.


ஆனால் 1987 இன் பின்னர் இந்தியாவிற்கும் தமிழீழத்திற்கும் நேரடித் தொடர்பு அற்றுப்போய்விட்டது. இது பல்வேறு வழிகளிலும் எமது போராட்டம் தெளிவான பாதையில் தமிழ் பேசும் மக்களின் தனி இறைமையை வலுப்படுத்தும் வகையில் வளர்ச்சியடைய காரணமாயிற்று. தெற்கு ஒசற்றியாஇ அஜாரியா என்பன ஏறத்தாழ தனி நாடுகளாகவே இப்பொழுது இயங்கி வருகின்றபோதும் அவை முழு இறைமை பெற்ற சுதந்திர நாடுகளாக விடாமல் ரஷ்யா பார்த்துக்கொள்கின்றது. ஏனெனில் இவை தமது தனி இறைமையை நிலைநாட்டி ஜோர்ஜியாவிலிருந்து முற்றாகப் பிரிந்துவிட்டால் ரஷ்யாவிற்கு அந்நாட்டை கட்டுப்படுத்திட உதவும் அழுத்தக் கருவிகள் இல்லாமல் போய்விடும்.இதனால் தெற்கு ஒசற்றியாஇ அப்காசியா என்பன திரிசங்கு நாடுகளாக தமது முழு இறைமையை அனுபவிக்க முடியாதவையாக இருந்து வருகின்றன. (அஜாரியா தனது சொந்த படைகளைக் கொண்டுள்ளது. அது ஜோர்ஜிய மத்திய அரசுக்கு எந்தவிதமான வரிகளையும் கொடுப்பதில்லை)
இவ்வாறுதான் தமது இறைமை சர்வதேச ரீதியாகஇ சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுவதை தவிர்ந்த ஏனைய விடயங்களிலெல்லாம் தனியரசாகவே குர்திஸ்தான் ஈராக்கின் வடக்கு மூலையில் அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கி வந்தது. சதாம் ஹ_சைனின் அரசு மீது இராணுவ hPதியாக அழுத்தம் கொடுக்கின்ற ஒரு கருவியாகவே அமெரிக்கா குர்திஸ்தானை பயன்படுத்தி வந்தது. (ஈராக்கின் எல்லைக்கு அப்பால் துருக்கியில் வாழும் குர்திஸ் மக்களை அந்நாட்டின் அமெரிக்கச் சார்பு அரசு அடக்கி ஒடுக்கி கொன்று குவித்து வருகின்றது என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்) இதைப்போல மியன்மாரில் சீனாவின் யூனான் மாகாண எல்லையையொட்டி அமைந்திருக்கும் ஷாண் அரசம் (Shan State) ஒரு திரிசங்கு நாடாகவேயுள்ளது.


மியன்மார் மீது அழுத்தங்களைச் செலுத்துவதற்கான ஒரு கருவியாக ஷாண் அரசை சீனா கருதுகின்றது. திரிசங்கு நாடுகளைப் போலன்றி புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழீழப் பிராந்தியம் யாருக்கும் கைப்பாவையாகாமல் இருப்பதே அமெரிக்கா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வகுக்கும் கேந்திர வியூகத்திற்கும் அதை முறியடிக்க இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கும் சிக்கலைக் கொடுக்கிறது. ஸ்ரீலங்கா படைகளைத் தனது செல்வாக்கினுள் கொண்டு வருவதற்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான பயிற்சி என்ற போர்வையில் அவற்றோடு தொடர்ந்து இறுக்கமான உறவைப் பேணுவதற்கும் தனது வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் புலிகனை வைத்திருப்பது அமெரிக்காவிற்குக் கட்டாயத் தேவையாகின்றது.ஸ்ரீலங்கா இராணுவத்தை இப்போக்கிலிருந்து தடுத்து தனது கைக்குள் போட்டுக் கொள்வதற்கு இந்தியா அண்மையில் எடுத்து வருகின்ற முயற்சிகளின் ஒரு வெளிப்பாடே ஸ்ரீலங்கா படைத்தளபதி லெப்.ஜெனரல் லயனல் பலேகல்லவின் தற்போதைய இந்தியச் சுற்றுலாவாகும்.
ஓஸ்லோ பிரகடனத்தின்படியே புலிகள் நடந்து கொள்ளவேண்டுமென அமெரிக்கா வற்புறுத்துவதும் இலங்கை இனப்பிரச்சினையின் தீர்வு எவ்வாறு அமைய வேண்டுமென வெளியார் தீர்க்கமுடியாது அது இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குள்ளேயே தீர்மானிக்கப்படவேண்டுமென இந்தியா அடிக்கடி வலியுறுத்துவதும் எமது போராட்டம் தற்போது


எவ்வகையானதொரு சர்வதேச பரிமாணத்தினுள் இருக்கின்றது என்பதையே காட்டுகின்றது.

எமது உரிமைப் போராட்டத்தின் பிரதான முட்டுக்கட்டைகளாக வருங்காலத்தில் அமையப் போவது சிங்களப் பேரினவாதிகளோ ஸ்ரீலங்கா இராணுவமோ அல்ல. தத்தமது கேந்திர மற்றும் பொருளாதாரக் குறிக்கோள்களை அடைவதற்கு அமெரிக்கா, இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் என்பன இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் வகுத்துக் கொண்டிருக்கின்ற வியூகங்களை அரசியல் ரீதியாகவும் போரியல் ரீதியாகவும் எதிர்கொண்டு எப்படி நாம் வரலாறு படைக்கப்போகின்றோம் என்பதே எம்முன் இன்றுள்ள சவாலாகும்.

14.12.2003 சிவராம்
Theme images by Jason Morrow. Powered by Blogger.