Header Ads

Header ADS

Thursday, 10 May 2018

முள்ளிவாய்க்கால் நிகழ்வினை ஒற்றுமையாக நடத்துங்கள்..!

முள்ளிவாய்க்கால் நிகழ்வினை ஒற்றுமையாக நடத்துங்கள் எங்களை அமைதியாக அழ விடுங்கள் என கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் காக்கா அண்ணா.
இது தொடர்பாக காக்கா அண்ணா உள்ளிட்டவர்கள் இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர் அங்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்ட அவர்கள் தெரிவித்ததாவது,

 தியாகங்களுக்கு மதிப்பளியுங்கள்

தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் நீண்டகாலம் பங்களித்த பாலிப்போடி சின்னத்துரை (யோகன்-பாதர்-மட்டக்களப்பு) , முத்துக்குமார் மனோகர் (பசீர்-காக்கா-யாழ்ப்பாணம்), ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் – திருமலை) ஆகிய நாங்கள் மூவரும் இன்றெழுந்துள்ள சுழலில் எமக்கான கடமையைச் செய்யாமலிருப்பது எம்மோடு நீண்டகாலம் பயணித்து மாவீரர்களான எமது நண்பர்கள், சகோதரிகளுக்கும், விடுதலையை நேசித்து முள்ளிவாய்க்கால் வரை எம்மோடு பயணித்து கடல், வான், தரை ஆகியமும்முனைத் தாக்குதல்களால் இனப் படுகொலைக்குள்ளான எமது உறவுகளின் ஆத்மாக்களுக்கு செய்யும்
துரோகம் எனக் கருதுகிறோம்.

கடந்த மாவீரர்நாள் தொடர்பாக எங்களில் ஒருவரான முத்துக்குமார் மனோகர் (காக்கா) விடுத்த
வேண்டுகோளை ஏற்று எவ்வித அரசியல் கலப்புமின்றி அமைதியான முறையில் வடக்கு – கிழக்கு
பகுதிகளில் மிகவும் கட்டுப்பாடாக அனைத்துத் துயிலும் இல்லங்களிலும் நிகழ்வுகள் நடந்தேறின. ஒழுங்கான நேர்த்தியான தமிழ்த் தலைமையால் 2009 மே 18 வரை வழிநடத்தப்பட்டோம் என்பதை முரசறைந்துகூறினர் எமது மக்கள். இதற்காக முள்ளிவாய்க்கால் வரை பயணித்த நாங்கள் மூவரும் எமது மக்களுக்குசிரம் தாழ்த்தி வணங்கி நன்றி கூறுகிறோம்இந்த அமைதிச் சூழலைக் குழப்பும் விதமாக செயற்படாதிருந்தமைக்காக ஊடகங்களுக்கும் எமது சிறப்பான நன்றிகள்.

ஏற்கனவே நினைவுகூரல் நிகழ்வுகளை வழிநடத்த சமூக, சமயத் தலைவர்கள் அடங்கிய
குழுவொன்றினை உருவாக்கி அந்நிகழ்வுகளின் நோக்கத்தையும், புனிதத்தினையும் சரியான முறையில்கொண்டு செல்ல வேண்டுமென இம்மண்ணினை நேசித்த பலரும் ஆலோசனை வழங்கியிருந்தனர். இன்றுள்ளபதற்றமான சூழலில் உடனடியாக இது சாத்தியப்படாதென்றே எமக்குத் தோன்றுகிறது.

ஒற்றுமையாய் வாரீர் என்ற கோஷங்களுக்கு மத்தியில் வெவ்வேறு நோக்கங்கள் இருப்பதாகக்
கருதுகிறோம். தாம் எதிர்பார்த்த ஒழுங்கில் நிகழ்வுகள் நடைபெறாவிட்டால் குழப்பங்கள் ஏற்படும் என எச்சரிப்பது எம்மை வேதனையில் ஆழ்த்துகிறது. எமது உறவுகளுக்காக மட்டுமல்லாது இன்றைய நிலைமைக்காகவும் சேர்த்து கண்ணீரைப் பங்கு போடுகிறது. மாவீரர்நாள் நிகழ்வுகளில் அமைதியைப் பேணியஎமது மக்களின் அமைதியையும் கட்டுப்பாட்டையும் மதிக்காததோடு எமது கடந்தகாலப் பங்களிப்பை எச்சரிப்போர் நிராகரிப்பதாகவே கொள்ளவேண்டியுள்ளது.

இந்த விடுதலைப்போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக ஆற்றிய பங்களிப்பை
போராட்டத்தின் பங்காளர்களான நாம் நன்கு அறிவோம். மாவீரர்நாள் தொடர்பான தனது வேண்டுகோளில் மனோகர் (பசீர் காக்கா) இதனை மறக்காது குறிப்பிட்டிருந்தார் என்பதையும் நினைவு படுத்துகிறோம்.

கிழக்கு மாகாணசபையில் தமிழரின் பிரதான கட்சி ஆட்சியில் பங்காளராக இருந்தது. இக்கட்சி
யின் செயலர் உட்பட இருவர் அமைச்சர்களாக இருந்தனர். இவர்களில் எவரும் இனப்படுகொலை என்ற தீர்மானத்தை தமது சபையில் நிறைவேற்றக்கூடிய சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயவேயில்லை.

இது தமது வரலாற்றுக்கடமை என்பதை உணரவுமில்லை. நடந்தவைகள் இனப்படுகொலை என்ற வகையறைக்குள் அடங்கமாட்டாதென்று வாதிடும் திறன்மிக்கோரால் தவறாக வழிநடத்தப்பட்டிருந்தனர்.

எது எவ்வாறிருந்தாலும் உலகத்தைப் பொறுத்தவரை வடமாகாணசபை நிறைவேற்றிய இனப்படு
கொலை என்ற தீர்மானம் காத்திரமானது, எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகுக்கு
ஆணித்தரமாக எடுத்துரைத்தது. இதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் எவரும் செயலாற்றக்கூடாதெனக் கருதுகிறோம். இத்தீர்மானத்தைக் கொண்டு வந்த வடக்கு முதல்வரின் பங்களிப்பை வேறெவரினதும் தேவைகளுக்கோ, நோக்கங்களுக்கோ நிராகரிப்பது ஏற்புடையதல்ல.

இந்த மே 18 க்குப்பின் நாம் எதிர்பார்க்கும் அரசியல் கலப்பற்ற, மதகுருமார் தலைமையிலான
நினைவேந்தல் குழுக்களின் உருவாக்கம் குறித்து விடுக்கப்படும் பொது அறிவித்தலொன்றின் பிரகாரம் செயற்படவேண்டும் என்றும் மாவீரர்நாள், திலீபனின் நினைவு, அன்னைபூபதி, மாமனிதர் சிவராம் நினைவு உட்பட மே 18 நிகழ்வையும் கூட இந் நினைவேந்தல் குழுக்களின் அறிவுறுத்தல் பிரகாரம் நடைமுறைப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

எமது விடுதலைப்போராட்டத்தில் தம்மை இழந்த மற்றும் பலியான அனைவரையும் மதிக்கும் அனைவரும் இவ்வேண்டுகோளை ஏற்பார்கள் என நம்புகிறோம். அன்னை பூபதி மற்றும் மாமனிதர் சிவராமின் நினைவு நிகழ்வுகளில் தவறாக வழிநடத்தப்பட்டோரால் நிகழ்ந்த வேதனையான சம்பவங்கள் அத் தியாகங்களுக்கு மதிப்பளித்த எமது மக்களால் ஜீரணிக்க
முடியாதவை.

எமது எதிர்பார்ப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புடனும் கலந்துரையாட ஆர்வமாக உள்ளோம். தயவு செய்து எமது வேண்டுகோளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். இரு தலைமுறையினராக இந்தப்போராட்டத்தில் பங்களித்த எமது வேண்டுகோளை நிராகரிக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.
Theme images by Jason Morrow. Powered by Blogger.