ஜாம்பியாவும் தூத்துக்குடியும்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவியிருக்கும் அதே
வேதாந்தா நிறுவனம்தான்,1999ல்  ஜாம்பியாவில் நிறுவப்பட்டிருந்த கே.சி.எம் என்கிற காப்பர் உருக்காலையை 2004ம் ஆண்டு வாங்கியது. ஜாம்பியா நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கிட்டதட்ட 50% பொதுமக்கள் கஃபூ நதிக்கரையில்தான் வாழ்கிறார்கள். அவர்களின் மொத்த குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆறாகக் கஃபூ இருந்து வருகிறது. 1600 கிலோமீட்டர் ஓடும் இந்த நதி, ஜாம்பியாவின் காப்பர் பெல்ட்டுக்கும் நீர் வழங்குகிறது. 2006 ல் வேதாந்தாவின் கே.சி.எம் நிறுவனம், கஃபூ நதியில் சல்ஃபியூரிக் அமிலம், பாதரசம், ஈயம், இரும்பு போன்றவற்றின் கழிவுகளைக் கலந்தது, அங்கு பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அங்கிருக்கும் மக்கள், அந்தத் தண்ணீரைக் குளிக்கப் பயன்படுத்தினால்கூட தங்களுக்குத் தோலில் அரிப்பு ஏற்படுகிறது எனவும், அடிக்கடி வயிற்று வலி வருகிறது. ஆனால், வேறு வழியில்லாமல் அந்தத் தண்ணீரைத்தான் தாங்கள் பயன்படுத்துகிறோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்துகளை அயல்நாட்டு ஊடகங்கள் வெளிகொண்டு வந்தன. அதே வேதாந்தா, அதே காப்பர், அதே கழிவுகள், அதே வலி… இன்று வரை ஜாம்பியாவிலும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.
2006 ல் ஜாம்பியாவின் காப்பர் பெல்ட்டால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் லுசாகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2011 ம் ஆண்டு ஜாம்பியாவின் லுசாகா உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட 2000 பேருக்கு 13 லட்சம் பவுண்ட் இழப்பீடு தர வேண்டுமென தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து வேதாந்தாவின் கே.சி.எம் மேல்முறையீட்டுக்குச் சென்ற போது, ஜாம்பியாவின் உச்சநீதிமன்றம் கே.சி.எம் குற்றம் செய்தது உறுதி என அறிவித்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை ரத்து செய்தது. பின்னர், ஜாம்பியாவில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள 1,826 மக்கள் லண்டன் உயர்நீதிமன்றத்தை நாடினர். இரண்டு வருடங்கள் அவர்கள் காத்திருந்ததற்கு பிறகு அக்டோபர் 2017ல் ‘உங்கள் குரலை நாங்கள் கேட்போம்’ என்று கூறியிருக்கிறது லண்டன் நீதிமன்றம். 
வேதாந்தாவின் கே.சி.எம் நிறுவனத்தின் மருத்துவர் ஒருவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம் கசிந்திருக்கிறது. அதில் அவர் எழுதியிருப்பது, `கிராம மக்கள் குடிக்க லாயக்கற்ற தண்ணீராக இது உள்ளது. அதில் காப்பர் மற்றும் இரும்பு அதிகஅளவில் கலந்துள்ளது. இதனால், ரத்தத்தில் புற்றுநோய் வர அதிக வாய்ப்புகள் உள்ளது. உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். மக்கள் அதை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட வேண்டும்’ என்று உள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளை அதிகமாகப் பொதுவெளிக்குக் கொண்டு வந்த ஃபாயில் வேதாந்தா (Foil Vedanta) என்கிற அமைப்பினருடன் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினோம். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
“ஜாம்பியாவில் உள்ள கே.சி.எம் நிறுவனத்தை 2004 ல் வேதாந்தா குழுமம் வாங்கியதிலிருந்து சிறிதும் குற்றவுணர்வு இல்லாமல் மாசுபடுத்தி வருகிறது. 40% ஜாம்பியா மக்களின் தாகத்தைத் தீர்க்கிறது கஃபூ நதி. 2006 ல் கஃபூ நதியின் முஷிஷிமா கிளையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி சல்ஃபியூரிக் ஆசிட், பாதரசம், ஈயம், இரும்பு, மெக்னீசியம் ஆகியவற்றைக் கலந்துவிட்டனர். இதனால் அந்தத் தண்ணீரில் காப்பரின் அளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைத் தாண்டி பத்து மடங்கு அதிகமானது. மெக்னீஷியத்தின் அளவு 770 மடங்கு அதிகமானது, கோபால்ட்டின் அளவு 100 மடங்கு அதிகமானது. தோராயமாக ஜாம்பிய மக்கள் 40,000 பேர் பாதிக்கப்பட்டார்கள், அவற்றுள் மோசமாகப் பாதிக்கப்பட்ட சிங்கோலாவைச் சேர்ந்த 2000 பேர் ஜாம்பிய நீதிமன்றத்தை நாடினார்கள். முதலில் 2 மில்லியன் டாலர் இழப்பீடு தரவேண்டுமெனக் கூறிய நீதிமன்றம், பின்னர் வேதாந்தா செய்த மேல்முறையீட்டில் இழப்பீட்டை ரத்து செய்தது. தற்போது லண்டனில் வழக்கு தொடர்ந்த பின்னர், லண்டன் நீதிமன்றம் மக்களுக்காக செவிசாய்த்துள்ளது. 2010 ல் கனடாவின் பொறியியல் நிறுவனமான எஸ்.என்.சி- லவாலின், கே.சி.எம் நிறுவனத்துக்கு மாசுக் கட்டுப்பாடு குறித்து ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டது. `மாசு கட்டுப்படுத்தும் அணை முழுதாக நிரம்பியுள்ளதால் தொடர்ந்து கஃபூ நதியின் கிளைகளை மாசுக்கு உள்ளாக்கியபடியே இருக்கிறது கே.சி.எம் நிறுவனம். நீர்த்தேக்கங்கள், குழாய்களிலிருந்து ஏற்படும் கசிவுதான் இதற்கு முதல் காரணம்’ என்கிறது அந்த நிறுவனத்திலிருந்து கசிந்த ஆய்வறிக்கை ஒன்று .   
அப்பகுதியைச் சுற்றியுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் கே.சி.எம் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகவே இருப்பதால் உள்ளூரில் புற்றுநோய் மற்றும் இதர நோய்களால் பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்களைப் பெறமுடியாத சூழல் நிலவி வருகிறது. கே.சி.எம்-ன் உருக்கு உலை 2006 ல் சிங்கோலா நகரத்தின் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில் நிறுவப்பட்டிருக்கிறது. சல்ஃபர் மற்றும் ஆர்செனிக் ஆகியவை குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று விடுகிறது. இதனால் மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் ஆகியவை மக்களுக்கு அடிக்கடி வருகிறது. உலைகள் வெடிக்கும்போதெல்லாம் அருகிலிருக்கும் வீடுகளின் சுவற்றில் விரிசல் விழுகிறது. இதைப்பற்றி அங்குள்ள மக்கள் புகார் செய்தும் கே.சி.எம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, உரிய இழப்பீடும் வழங்கவில்லை. உருக்கு உலையை ஃபின்லாந்தின் `அவுட்டவுடெக்’ (Outotec) என்கிற நிறுவனம் கட்டியது. இதை ‘உலகின் மிகுந்த ஆற்றுலுடைய, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத ஒன்று’ எனக் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள்  சொல்லும் இந்த விஷயம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. 
கே.சி.எம் மற்றும் ஸ்டெர்லைட் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சி.எஸ்.ஆர். (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி) சமூக சேவைகளைச் சிறிய அளவு முதலீட்டில் செய்துவிட்டு அதிக அளவில் விளம்பரப்படுத்துகிறது. வேதாந்தா ஜாம்பியாவிலும், இந்தியாவின் தூத்துக்குடியில் தன்னுடைய பிரிட்டிஷ் அடையாளத்தை மறைத்துச் சொந்த நாட்டுத் தொழிற்சாலையாக அடையாளப்படுத்திக்கொள்கிறது. அது மட்டுமன்றி லாபத்தைக் குறைத்துக் காண்பித்து வரி ஏய்ப்புச் செய்துள்ளனர். ஜாம்பியாவில் உள்ள கே.சி.எம் பல வருடங்களாக லாபமில்லையென்று கணக்குக் காண்பித்து வரி கட்டாமல் அலைக்கழித்தார்கள். ஆனால், பெங்களூரில் நடந்த வணிக மாநாட்டில் வருடத்துக்கு 500 மில்லியன் டாலர் வருமானம் பார்த்ததாகக் கூறியிருக்கிறது வேதாந்தா. கழிவுகளிலிருந்து தங்கம், வெள்ளி முதலியவற்றைப் பிரித்துச் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டுவதாகப் புகார்கள் குவிகின்றன.
சொல்லப்போனால் ஜாம்பியாவிலும், தூத்துக்குடியிலும் பிரச்னைகள் ஒன்றுதான். ஜாம்பியாவிலும் காற்று அதிகம் மாசுபட்டிருக்கிறது, தூத்துக்குடியிலும் தண்ணீரின் தன்மை பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜாம்பியாவில் தண்ணீர் மாசுபட்டதை மையப்படுத்தி பிரச்னை வெளிவந்தது. தூத்துக்குடியில் காற்று மாசுபட்டதை மையப்படுத்தி பிரச்னை வெளிவந்தது. அவ்வளவுதான் வித்தியாசம்.” என்கிறது ஃபாயில் வேதாந்தா.  
2009 ம் ஆண்டு ஜாம்பியாவில் ஓடும் கஃபூ நதியின் முஷிஷிமா கிளையின் தண்ணீரை விஞ்ஞானிகள் பரிசோதித்ததில், காப்பர், கோபால்ட், மேங்கனீஸ், சல்பேட் ஆகியவை ஜாம்பியாவின் கழிவு நீர் விதி உச்சங்களைத் தாண்டியுள்ளது. காப்பரின் அளவு ஒரு லிட்டருக்கு 29,400 μg (ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு :- 1000μg/லிட்டர்). கோபால்ட்டின் அளவு 5,824 μg/லிட்டர்  (ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு :- 1500 μg/லிட்டர்). மேங்கனீஸின் அளவு 33,980 μg/லிட்டர் (ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு:- 1000  μg/லிட்டர்), மற்றும் சல்ஃபரின் அளவு 1,850 mg/லிட்டர் (ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு:-1500 mg/லிட்டர்) இருந்திருக்கிறது. இத்தகைய தண்ணீரைத்தான் அவர்கள் பருக வேண்டிவந்துள்ளது. 
கட்டுகள் கண்ணை மறைத்தப் பிறகு இவர்களுக்குத் தூத்துக்குடியாக இருந்தால் என்ன.. ஜாம்பியாகவாக இருந்தால் என்ன.. சுடுகாடாக்கிவிட்டுச் செல்ல வேண்டியதுதான்! 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.