இரவு நேரத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளில் காவல்த்துறை செய்யும் செயல்??

இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணிகளில், காவல்த்துறை சிலர் இரவு நேரங்களில் புதையல் தோண்டுவதாக கிளிநொச்சி – கரைச்சி அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத்தலைவர்களான எஸ்.சிறிதரன் மற்றும் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் தலைமையில் கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் காணி விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணியில், காவல்த்துறை என தம்மை அடையாளத்துடன் இரவு நேரங்களில் புதையல் தோண்டுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்தினர்.

இதன்போது வருகை தந்திருந்த காவல்த்துறை அதிகாரியிடம் குறித்த விடயம் தொடர்பில் அங்கஜன் வினவினார். குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் அகழ்வு தொடர்பில் பிரதேச மக்களால் தமக்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், அங்கிருந்து பெறப்பட்ட மாதிரிகளை தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும், எனினும் அவர்களை அடையாளம் காண முடியாதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விடுவிக்கப்பட்ட காணிகளில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் என்பன காணப்படுவதாக அண்மைக் காலமாக தெரிவிக்கப்பட்டு வருவதோடு அது தொடர்பில் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக அபிவிருத்திக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.