1975 ஆம் ஆண்டென நினைவு - கவிக்கோ அப்துல் ரகுமான்!

1975 ஆம் ஆண்டென நினைவு.

இலங்கையில் நடைபெறும் மீலாத் தின நிகழ்வுகளில் உரை நிகழ்த்துவதற்காக தெமட்டகொடை Y.M.M.A. அமைப்பின் ஏற்பாட்டில் கவிக்கோ அப்துல் ரகுமான் முதற்றடவையாக வருகை தந்தார்.


அவருடைய வருகைக்கு முன்னரே , " அப்துல் ரகுமான் இலங்கை வருகிறார். உங்கள் முகவரியை அளித்துள்ளேன் . அவர் உங்களைச் சந்திப்பார் " என கவிஞர் மீரா ( பேராசிரியர் மீ. இராசேந்திரன் ) எனக்குக் கடிதம் எழுதியிருந்தார் . இலங்கை வந்து சேர்ந்த பின்னர் அவர் எங்கே தங்கியிருக்கிறார் என்ற விபரத்தை அறிந்துகொள்ள முடியாமலிருந்தது . சில நாட்களின் பின்னர் Y.M.M.A. யிலிருந்து ஒரு கடிதம் வந்தது. கவிஞர் அப்துல் ரகுமான் கூறியதற்கிணங்க இக்கடிதத்தை எழுதுவதாகவும் தெமட்டகொடை Y.M.M.A. வந்து அவரைச் சந்திக்கும்படியும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அக்காலப் பகுதியில் கொழும்புப் பரிச்சயம் எனக்குக் குறைவு. எனவே , தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர் லெ. முகபூபதியும் நானும் தெமட்டகொடைக்குச் சென்று Y.M.M.A. பற்றி விசாரித்து மருதானை வீதியில் வெகு தூரம் நடந்து குறித்த இடத்தை அடைந்தோம் . கவிஞர் பகலுணவுக்காகச் சென்றுள்ளதாகக் கூறி அங்கிருந்தோர் , புறக்கோட்டையிலுள்ள ஒரு கடையின் முகவரியைத் தந்தனர் . இருவரும் மருதானை நோக்கி நடந்தபோதுதான் தெமட்டகொடை Y.M.M.A. அமைந்திருப்பது தெமட்டகொடையிலல்ல - மருதானையில் என்பது தெரிந்தது :) :). தலையைச் சுற்றி மூக்கைப் பிடித்த கதை.

குறித்த முகவரியில் எஸ். எம். கமால்தீனும் அப்துல் ரகுமானும் இருந்தனர். கமால்தீன் தனது காரில் அப்துல் ரகுமானைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றார். காரில் என்னையும் முருகபூபதியையும் ஏறிக்கொண்டார். இரவுவரை அவர்களுடன் சுற்றினோம் ; பேசினோம் . கடைசியில் கமால்தீனின் வீட்டை அடைந்தோம் . அங்குதான் அப்துல் ரகுமான் தங்கியிருந்திருக்கிறார். அங்கேயும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றோம் .

மறுநாள் அவர் தாயகம்திரும்பியதால் முருகபூபதியும் நானும் விமானநிலையம் சென்றோம் . அவரை வழியனுப்ப எவரும் வரவில்லை. விமான நிலைய நுழைவாயிலில் இறக்கிவிட்டு கமால்தீனும் சென்றுவிட்டார். விமானநிலையத்தில் இப்போதுபோல அன்று எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. பார்வையாளர் கூடத்தினுள் சுதந்திரமாகச் சென்று வழியனுப்பக் கூடியதாக இருந்தது. கவிக்கோ விமானத்திலேறிக் கையசைத்து விடைபெறும்வரை அங்கிருந்துவிட்டு மீண்டோம்.

அதன்பின் அவர் இலங்கை வந்த சந்தர்ப்பங்களில் சந்தித்திருந்தாலும்கூட , அவர் மரணித்த ஓராண்டு நிறைவின்போது எமது முதலாவது சந்திப்பின் நினைவுகள் மீள்வதைத் தவிர்க்க முடியவில்லை .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.