தவராசாவிற்கு சவால் விடும் தர்மலிங்கம் சுரேஸ்!

வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் தவராசாவிற்கு முள்ளந்தண்டு இருந்தால் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை
கொண்டுவந்து அவரை பதவி நீக்கம் செய்யட்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு.மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் சவால் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு தாமரைக்கேணியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி காரியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஊழல் மோசடியில் ஈடுபட்டார் என்பதற்காக அவரை பதவி விலக்கும் அதிகாரம் ஆளுநருக்கே இருந்த நிலையில், முதலமைச்சர் இது தொடர்பில் ஆளுநருக்கு அறிவித்திருந்தார்.

அதன் பிரகாரம் ஆளுநர் அதனை வர்த்தமானியில் பிரசுரித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு அவர் எந்தவிதமான அறிவித்தலும் வழங்காதமையால் அவருக்கு அந்த பதவியை மீளவும் வழங்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இருந்தபோதும், ஈ.பி.டி.பியுடன் கூட்டுச் சேர்ந்த தவராசா, முதல்வர் விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். அவருக்கு முள்ளந்தண்டு இருந்தால் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவந்து அவரை பதவி நீக்கம் செய்து பெரும்பான்மையை நிரூபித்து காட்டட்டும் பார்ப்போம்.

இவர் கடந்த அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார்” என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.